பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு… காஷ்மீரில் தொடர்ந்து வெடிக்கும் கலவரம்..!

காஷ்மீர்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் அரசு ஒரு சூனியக்காரி போல அப்பாவி மக்களைக் கொல்வதாகவும் பாகிஸ்தான் அரசின் கைகள் ரத்தத்தால் நனைந்துள்ளதாகவும் போராட்டத்தை நடத்தும் நவாஸ் மிர் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் தங்களை ஒடுக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் தங்கள் போராட்டங்கள் கடைசி வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

நமது நாட்டின் ஒரு பகுதியான காஷ்மீரைப் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமித்து வருகிறது. அந்த காஷ்மீர் பகுதி தங்களுக்குச் சொந்தம் என்றும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் உட்பட பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கிடையே மக்கள் விரோ போக்குடன் செயல்படுவதாக பாகிஸ்தான் ராணுவத்தையும், அரசையும் அவாமி ஆக்‌ஷன் கமிட்டியின் (AAC) மூத்த தலைவர் ஷௌகத் நவாஸ் மிர் கடுமையாகச் சாடியுள்ளார். மக்களைக் கொல்லும் சூனியக்காரியுடன் பாகிஸ்தானை ஒப்பிட்ட அவர், ராணுவமும், அரசும் சொந்த மக்களையே நசுக்குவதாகக் குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், “சும்மா (ஆக்கிரமிப்பு) காஷ்மீர் சுதந்திரமாக இருக்கிறது என வாய் வழியாகச் சொல்வது உண்மையான சுதந்திரத்தைக் கொடுக்காது. பல ஆண்டுகளாக இங்குச் சுரண்டல் மற்றும் அடக்குமுறைகள் அதிகமாக இருக்கிறது. எங்கள் போராட்டம் ஒரு தனிநபருக்கு எதிரானது அல்ல, ஒரு முழு அமைப்புக்கு எதிரானது. இது மக்களின் போராட்டம்.. இது உங்களின் போராட்டம்.. இது நம் அனைவரின் போராட்டம். நாம் அனைவரும் இணைந்து இந்த அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுப்போம்” என்றார்.

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு நிலவும் ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு 3வது நாளாகப் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் சில இடங்களில் வன்முறையும் தொடர்ந்து வருகிறது. இதில் பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஷௌகத் நவாஸ் மிர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இந்தியா மீது குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், பாகிஸ்தான் அரசே எங்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழித்துவிட்டுள்ளது. இந்தியர்கள் அட்டூழியங்கள் செய்வதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் அவர்களின் கைகளே காஷ்மீரிகளின் ரத்தத்தால் நனைந்துள்ளன” என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.

மாறுபட்ட கருத்து உடையவர்கள் கொடூரமாக ஒடுக்கப்படுகின்றன என்றும் உள்ளூர் ஊடகங்கள் மௌனமாக்கப்படுகின்றன என்றும் நவாஸ் மிர் தெரிவித்தார். நீதி நிலைநாட்டப்படும் வரை மக்கள் உரிமைகள் மீண்டும் கிடைக்கும் வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என மிர் தெரிவித்தார்.. இந்த இரண்டையும் அடையும் வரை எதிலிருந்தும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், (பாகிஸ்தான்) அரசு எவ்வளவு ஒடுக்குமுறையை ஏவினாலும் போராட்டம் கடைசி வரை தொடரும் என்றும் அவர் அறிவித்தார்.

காஷ்மீர் தங்களுக்குச் சொந்தம் எனச் சொல்லி பாகிஸ்தான் ஒரு பகுதியை ஆக்கிரமித்தாலும் கூட அதன் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டமாகத் தொடங்கிய இது, இப்போது பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தை நேரடியாக எதிர்கொள்ளும் ஒரு முழுமையான இயக்கமாக மாறியுள்ளது.