பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கு – ரத்து செய்த உயர்நீதிமன்றம்.!

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது.

அந்த பிரிவில் டி.எஸ்.பியாக பணியாற்றிய காதர் பாட்ஷா, மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இதனை எதிர்த்து மாணிக்கவேல் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, “வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை. குற்றப்பத்திரிகையும் ஏற்கத்தக்கதல்ல. முதல் தகவல் அறிக்கையும் தேவையற்றது,” எனத் தெரிவித்தார்.

மேலும், “சிலை திருட்டு விசாரணைகளை சீர்குலைக்கும் வகையில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அது நீதிமுறை நிர்வாகத்தின் நலனுக்கு கேடு விளைவிக்கும்” என்றும் கூறினார். காதர் பாட்ஷா மீது வழக்கே இன்னும் நிலுவையில் இருக்கும்போது, மாணிக்கவேல் மீது வழக்கு தொடரப்பட்டது என்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.