சட்டத்திற்கு உட்பட்டே கார்களை வாங்கினேன்… திரும்ப ஒப்படைக்க நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு.!

திருவனந்தபுரம்: பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட சொகுசு கார்களை ஒரு கும்பல் இந்தியாவில் மறுபதிவு செய்து வரி ஏய்ப்பு நடத்தி விற்பனை செய்து வருவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் நடத்திய விசாரணையில் கேரளாவில் மட்டும் இதுபோல 200க்கும் அதிகமான சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்காலைக்கல் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் துல்கர் சல்மானின் வீட்டிலிருந்து 2 கார்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் உள்ள மேலும் 2 கார்கள் குறித்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. நடிகர் அமித்க்காலைக்கல்லிடமிருந்து 6 கார்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் தன்னுடைய கார்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பது: சட்டத்திற்கு உட்பட்டே நான் கார்களை வாங்கினேன். ஆனால் எந்த ஆவணங்களையும் பரிசோதிக்காமல் சுங்கத்துறை என்னுடைய கார்களை கைப்பற்றியுள்ளது. அவற்றை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளனர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.