ஸ்ரீநகர்: லடாக்குக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரி நடந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை காரணமாக, போராட்டக்காரர்கள் வன்முறையில் குதித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த உயிர் பலிக்கு போராட்டக்காரர்கள்தான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் தனி மாநிலமாகவும், லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. விரைவில் லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று சொல்லப்பட்டாலும், கடந்த 6 ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
இதனையடுத்து எல்ஏபி மற்றும் கேடிபி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாநில அந்தஸ்துக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக சூழலியல் ஆர்வலரான சோனம் வாங்சுக் கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து, அவரும் அவருடன் உண்ணாவிரதம் இருந்த மற்ற போராட்டக்காரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று எல்ஏபி மற்றும் கேடிபி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் போராட்டத்தை தடுக்க நினைத்த காவல்துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதையும் மீறி ஒன்று கூட்டிய போராட்டக்காரர்கள் பேரணியை நடத்தினர். அப்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைக்க காவல்துறை முயன்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு காரணம் சூழலியல் ஆர்வலரான சோனம் வாங்சுக் என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. அதாவது லடாக்கில் நடந்த வன்முறைப் போராட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் தூண்டுதலே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது.
சோனம் வாங்சுக்கின் தூண்டுதல் பேச்சுகள், குறிப்பாக அரபு வசந்தம் மற்றும் நேபாளத்தின் ‘ஜென் Z’ போராட்டங்கள் குறித்த அவரது கருத்துகள், ஒரு கும்பலை வன்முறையில் ஈடுபடத் தூண்டியதாகவும், இதனால் தீவைப்பு, பெரிய அளவிலான மோதல்கள் மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.