காற்று மாசு… 81 லட்சம் பேர் பலி… இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்… சீன அதிபர் அறிவிப்பு..!

வாஷிங்டன்: உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 81 லட்சம் மக்கள் காற்று மாசு காரணமாக பலியாகின்றனர். இந்நிலையில், இதற்கு காரணமான நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக்கொள்வதாக சீன அதிபர் ஐநா சபையில் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

சீனா உலகின் மிகப்பெரிய வல்லரசாக மாறி வருகிறது. அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவையே மிஞ்சிவிடும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீனாவின் வளர்ச்சி மிக பிரம்மாண்டமாய் மாறி இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அந்நாடு, புதை படிம எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்துவதுதான். பூமிக்கடியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து போன விலங்குகளின் படிமங்கள் நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் மாறிவிடுகிறது இதைத்தான் புதைபடிம எரிபொருள் என்று அழைக்கிறார்கள்.

இதை பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளியாகும் கார்பன், பூமிக்கு மிகவும் ஆபத்தானதாகும். கார்பன் நேரடியாக மனிதர்களை பெரிய அளவில் பாதிக்காது என்றாலும், அது வளிமண்டலத்தில் படிந்து சூரிய ஒளியை பூமிக்குள் இருந்து வெளியேற்றாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் பூமி வெப்பமடைந்து பணி பாறைகள் உருகி காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. காலநிலை மாற்றம் புதிய நோய்களையும், வெள்ளம் போன்ற பாதிப்புகளையும், முன் கணிக்க முடியாத வானிலை பேரழிவுகளையும் ஏற்படுத்துகிறது.

இவையெல்லாம் விளிம்பு நிலை மக்களைதான் கடுமையாக பாதிக்கின்றன. அதேபோல புதைபடிம எரிபொருள் எரிக்கப்படும் பொழுது அதிலிருந்து வெளியாகும் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற நச்சுப் பொருட்களும், நுண் துகள்களும் சுவாசிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நச்சுப் பொருட்கள் மற்றும் நுண்துகள்களை சுவாசிப்பதால் மட்டும் சுமார் 81 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். கார்பன் வெளியேற்றத்தில் முதலிடத்தில் இருப்பது சீனாதான்.

உலகம் முழுவதும் வெளியேற்றப்படும் மொத்த கார்பன் அளவில் சீனா மட்டுமே 30 சதவீதத்தை கொண்டிருக்கிறது. எனவே கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் நேற்று ஐநா சபையில் பேசிய சீனா அதிபர் ஜி ஜின்பிங், தனது நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவை எதிர்வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் 7 லிருந்து 10 சதவீதமாக குறைப்பதாக அறிவித்திருக்கிறார்.

இது மிகப்பெரிய வேலை. அமெரிக்கா கூட கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முன்வரவில்லை. அமெரிக்கா 14 சதவீதம் அளவுக்கு உலக அளவில் கார்பனை வெளியேற்றி வருகிறது. கார்பன் வெளியேற்றத்தில் அதிகம் பங்களிக்க கூடிய நாடுகளில் அமெரிக்கா சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் சீனா வெளிப்படையாக கார்பன் உமிழ்வை குறைக்கிறோம் என்று கூறியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்று இருக்கிறது.

கார்பன் உமிழ்வுக்கு காரணமான புதை படிம எரிபொருளை பயன்படுத்துவதற்கு பதில், காற்றாலை மற்றும் சூரிய சக்தியை 6 மடங்கு அதிகரிக்க இருப்பதாக சீனா அதிபர் தெரிவித்திருக்கிறார்

இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவை தாக்கி பேசிய சீன அதிபர், “ஒரு சில நாடுகள் கார்பன் உமிழ்வை குறைக்கும் திட்டத்திற்கு எதிராக செயல்பட்டாலும், சர்வதேச நாடுகள் சரியான திசையில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி இருந்தது. பிரிட்டன் ஒரு குளிர் பிரதேசம். ஆனால், அங்கு அதிக அளவில் வெயில் பதிவாகி இருந்தது. இது பிரிட்டனின் சூழலியல் அமைப்பை மாற்றியது. அதேபோல பாகிஸ்தானில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 1,000 பேர் வரை உயிரிழந்தனர். 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடி பெயர்ந்தனர். இதற்கெல்லாம் காரணம் கார்பன் உமிழ்வும் அதனால் ஏற்படும் காலநிலை மாற்றமும்தான்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின்படி, 195 நாடுகளும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் வெளியேற்றப்படும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது, 5 ஆண்டுகளில் எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது குறைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து மீண்டும் விவாதிப்பது என்று முடிவு செய்திருந்தன. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா பாதியில் கழன்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.