குடி, சிக்கன் & மட்டன், பெண்களுடன் கும்மாளம்… பணம் காலியானதும் ரிப்பீட்டு… பேங்க் கேங் கும்பல் சிக்கியது எப்படி..?

புதுக்கோட்டை: தமிழகத்தில் பல்வேறு வகைகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, செயின் பறிப்பு என ஒவ்வொரு கேங்கும் ஒவ்வொரு வகையில் கொள்ளை அடிக்கிறார்கள்.

அதுபோல வங்கி வாசலிலேயே வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலைத் தான் ஆலங்குடி தனிப்படை போலீசார் இப்போது கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

புதுக்கோட்டை அடுத்துள்ள கொத்தக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு.. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியாக வேலை செய்யும் பிரபு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.1.40 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வங்கியில் இருந்து பணத்தை வாங்கி வெளியே வந்த அவர், வங்கி வாசலில் தனது ஸ்கூட்டியில் பணத்தை வைத்துள்ளார்.

பிறகு பிரபுவும் அவரது மனைவியும் அருகே இருந்த டீக்கடைக்கு போய் டீ குடித்துள்ளனர். சில நிமிடங்களில் டீ குடித்துவிட்டு, ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டனர். வீட்டிற்கு வந்து ஸ்கூட்டியில் பணம் இருந்த பையை எடுத்துப் பார்த்த போதுதான் அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. பேங்கில் இருந்து வாங்கிய ரூ.1.40 லட்சம் பணமும் மொத்தமாகக் காணவில்லையாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு உடனடியாக ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான குற்றப்பிரிவு குழு, வங்கி அருகே இருந்த சிசிடிவி கேமராவை வைத்து முதலில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

வங்கி அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, இளைஞன் ஒருவர், சுற்றிச் சுற்றிப் பல முறை ஸ்கூட்டி அருகே வந்து பார்ப்பதை போலீசார் நோட் செய்துள்ளனர். அந்த வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணையை நடத்திய நிலையில், அந்த இளைஞர் பெரம்பலூர் அரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த மண்டை செந்தில் எனப்படும் செந்தில்குமார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

திருச்சியில் வேறு சில இளைஞர்களுடன் சேர்ந்து இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களில் செந்தில் தொடர்ந்து ஈடுபடுவதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் மீது 10 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கோவையில் பதுங்கி இருந்த செந்திலையும் கூட்டாளி ராஜ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட விஷ்ணு வெங்கடேஷ், குணசீலன் ஆகியோரையும் திருச்சியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலம் பகீர் கிளப்புவதாக இருந்தது. அதாவது முதலில் மண்டை செந்தில் நோட்டம் பார்ப்பாராம். வங்கிக்கு வெளியே நின்று கொண்டு யார் அதிகப் பணம் எடுத்து வருகிறார்கள் என்பதைக் கண்காணிப்பாராம். அதிகப் பணத்தை எடுத்து வருவோரைப் பார்த்தவுடன் மற்றவர்களுக்கு சிக்னல் கொடுப்பாராம். உடனே அவர்கள் வந்து பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டுத் தப்பி சென்றுவிடுவார்களாம்.

பணம் வந்ததும் பக்கத்தில் இருக்கும் ஊருக்குப் போய் குடித்துவிட்டு கும்மாளம் போட்டு, பெண்களுடன் தனிமையிலும் இருப்பார்களாம். கையில் இருக்கும் பணம் காலியான பிறகு மீண்டும் கொள்ளையை ஆரம்பித்துவிடுவார்களாம். அப்படித் தான் பிரபு பணத்தை எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணி சென்றுள்ளனர். அங்குக் குடி, சிக்கன் & மட்டன், பெண்களுடன் கும்மாளம் அடித்துவிட்டு ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

அப்போது செந்தில் மற்றும் ராஜ்குமார் போலீசில் மாட்டிவிடவே இந்தக் கொள்ளைக் கும்பல் போலீசில் சிக்கியுள்ளது. அவர்கள் ரூ.1.40 லட்சத்தைக் கொள்ளையடித்த நிலையில், அதில் ரூ.70 ஆயிரம் மட்டுமே மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.