டிடிவி தினகரன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த அண்ணாமலை – இருவரின் பிளான் தான் என்ன..?

மிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணி தள்ளாட்டத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் எதிரிகளான ஓபிஎஸ்ஸும், அமமுகவின் டிடிவி தினகரனும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்கள்.

எடப்பாடிக்காக பாஜக தலைவர்கள் தன்னை மதிக்கவில்லை என ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.

அதே வேளையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக டிடிவி தினகரன் வெளிப்படையாகவே தெரிவித்தார். எடப்பாடியை தவிர வேறு யாரையும் முதல்வர் வேட்பாளராக ஏற்க தயார் என்று கூறியிருந்தார். மேலும் ‘தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இபிஎஸ் இருக்கிறார் என்ற ஆணவத்தில் தன்னையும், ஒபிஎஸ்ஸையும் மதிக்கவில்லை’ என்பதையும் டிடிவி பொது வெளியில் போட்டு உடைத்திருந்தார்.

அதே வேளையில் அண்ணாமலைக்கு பாராட்டு பத்திரம் வாசித்த டிடிவி, ‘இபிஎஸ்க்கு நயினார் சாமரம் வீசிக் கொண்டுக்கிறார். ஆனால் அண்ணாமலை அப்படியல்ல; கூட்டணி கட்சிகள் அனைவரையும் மதிப்பவர்’ என்று ஏகத்துக்கும் புகழந்து தள்ளியிருந்தார். இது ஒருபக்கம் இருக்க, கோபத்தில் வெளியில் சென்ற டிடிவியையும், ஓபிஎஸ்ஸையும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நயினாருக்கு அமித்ஷா கட்டளையிட்டார்.

இதற்கிடையே டிடிவி கூட்டணியில் இருந்து வெளியேறியது வருத்தமளிக்கிறது. அவரை மீண்டும் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பேன் என்று கூறியிருந்த அண்ணாமலை, டிடிவி தினகரனை திடீரென சந்தித்து பேசியுள்ளார். டிடிவியின் வீட்டுக்கே தனது ஆதரவாளர்கள் சிலருடன் நேரடியாக சென்ற அண்ணாமலை சுமார் 2 மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் என்ன பேசினார்கள்? என்பதே இப்போது தமிழக அரசியல் களத்தின் ஹாட் டாபிக்காக உள்ளது.

டிடிவியை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என அமித்ஷா உத்தரவிட்டு இருந்த நிலையில், அவரை சந்தித்த அண்ணாமலை இது குறித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. ‘மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாருங்கள். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என அண்ணாமலை அவருக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. தனது நண்பரான அண்ணாமலை பேசியதால் மனது மாறிய டிடிவி தினகரன் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புகிறார் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். டிடிவி தினகரன் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்து விட்டார் என்ற நற்செய்தியை சொல்ல தான் அவர் டெல்லிக்கு பறந்ததாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் டிடிவியை அண்ணாமலை சந்தித்த விஷயமே வேறு என்று கிசுகிசுக்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

அண்ணாமலையை பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே அவர் அதிமுக கூட்டணியை விரும்பவில்லை. எடப்பாடியை கடுமையாக விமர்சித்தார். இதனால் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணிக்கு வருவோம் என்று பாஜகவுக்கு நிபந்தனை விதித்து அதில் வெற்றி கண்டார் எடப்பாடி. இதன்பிறகு தலைவராக வந்த நயினார், அண்ணாமலையையும், அவரது ஆதரவாளர்களையும் ஓரங்கட்டியது வெட்ட வெளிச்சமானது.

ஒருபக்கம் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது, மறுபக்கம் பாஜக எந்த ஒரு முக்கிய பொறுப்பும் கொடுக்காதது, மற்றொரு பக்கம் நயினாரின் செயல்கள் பிடிக்காதது என விரக்தியில் இருந்தார் அண்ணாமலை. ஏற்கெனவே எடப்பாடியை பிடிக்காது என்பதால் அண்ணாமலை தான் டிடிவியையும், ஓபிஎஸ்ஸையும் தூண்டி விட்டு கூட்டணியில் இருந்து வெளியேற செய்ததாக தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் தான் அண்ணாமலை டிடிவியை சந்தித்து அடுத்தக்கட்ட நகர்வு குறித்து பேசியதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

அமித்ஷாவின் அழுத்தத்தால் சமீபகாலமாக எடப்பாடியை அண்ணாமலை புகழ்ந்தாலும், அவர் அதிமுக மீதும், பாஜக தலைமை மீதும் விரக்தியில் இருப்பதாகவே பலரும் தெரிவிக்கின்றனர். இதனால் பாஜகவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை அழைத்து கொண்டு விஜய்யின் தவெக பக்கம் ஒதுங்கி விடலாமா? அல்லது தனியாக ஒரு அணி அமைத்து தேர்தலில் போட்டியிடலாமா? என்பது குறித்து அண்ணாமலை யோசித்து வருவதாக தெரிவிகிறது. இது தொடர்பாகத்தான் அவர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை உண்மையில் பேசியது என்ன? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.