அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக மனம் திறந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்தார்.அதன்பின் நாள்தோறும், கோபி குள்ளம்பாளையத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா அணியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக சேலத்தில் இருந்து சித்தோடு, கோபி, சத்தி வழியாக நீலகிரி மாவட்டம் செல்கிறார். எடப்பாடி வருகையையொட்டி செங்கோட்டையன் சொந்த ஊரான கோபியில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த முறை எடப்பாடி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பரப்புரையைத் தொடங்குவதற்காக கோபி வழியாக சென்றபோது, வீட்டில் இருந்த செங்கோட்டையன் அவரை வரவேற்கச் செல்லாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒருங்கிணைப்புப் பணியைத் தொடங்காவிட்டால் எடப்பாடி பழனிச்சாமியுடனான தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஏற்கனவே செங்கோட்டையன் அறிவித்து இருந்ததால், மீண்டும் சர்ச்சை ஏற்படலாம் என்பதாலும், கோபியில் இருப்பது தனக்குச் சரியானதாக இருக்காது என்று கருதிய செங்கோட்டையன் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டில் இருந்து திடீரென கிளம்பி சென்னை புறப்பட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
அதேவேளையில் சென்னை செல்லவில்லை என்றும் அவர் கோவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அவர் எங்கே இருக்கிறார்? என்பது தெரியாத வண்ணம் தலைமறைவாகியிருப்பதன் மூலம்,அவர் வைத்த கோரிக்கை தொடர்பாக சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதும் அதனால் அவர் எடப்பாடியைப் புறக்கணிக்கிறார் என்பதும் புலனாகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதனால்,கட்சிக்குள் என்ன நடக்கிறது? என்று புரியாமல் ஈரோடு மாவட்ட அதிமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.