ஆன்லைனில் கோடி கணக்கில் சுருட்டல்… 15 மாநிலங்களுக்கு மாற்றும் ‘சைபர்’ மோசடி கும்பல் – அதிர்ச்சி தகவல்.!!

சென்னை: ஆன்​லைன் வர்த்​தகம் என்ற பெயரில் பறிக்​கும் கோடிக்​கணக்​கான பணத்​தை, ‘சைபர்’ மோசடி கும்​பல் ஒரே நேரத்​தில் 15-க்​கும் மேற்​பட்ட மாநிலங்​களுக்கு மாற்​று​வ​தாக அதிர்ச்​சி​யூட்​டும் தகவல் வெளி​யாகி உள்​ளது.

இரட்​டிப்பு பணம், டிஜிட்​டல்கைது, பகு​திநேர வேலை, கிரிப்டோ கரன்​சி, பங்​குச்​சந்தை முதலீடு, வாட்​ஸ்​-அப் ஹேக்​கிங் உட்பட பல்​வேறு வகை​யான சைபர் க்ரைம் மோசடிகள் தின​மும் நடந்து வரு​கின்​றன. அந்த வகை​யில் ஆன்​லைன் வர்த்தக பணமோசடி​யும் ஒன்​று. இந்த வகை மோசடி செய்​யும் நபர்​கள் யார்? எங்​கிருக்​கிறார்​கள்? எங்​கிருந்து பேசுகிறார்​கள்? என்பன போன்ற எந்த விபர​மும் தெரி​யாது.

ஆனால், இரட்​டிப்பு லாபம், குறுகிய காலத்​தில் அதிக வரு​மானம், அடுத்த சில மணி நேரங்​களி​லேயே கை நிறைய பணம் என்பன போன்ற உத்​திர​வாதத்​தில் மயங்​கி, மோசடி கும்​பல் தெரிவிக்​கும் போலி​யான ஆன்​லைன் வர்த்தக தளத்​தில் சிலர் கோடிக்​கணக்​கில் பணத்தை முதலீடு செய்து விடு​கின்​றனர்.

முதலீட்டு பணத்​துக்கு முதலில்லாபம் வரு​வது​போல் ஆசையைத் தூண்​டு​வார்​கள். பின்​னர், அவர்​களை பேச்​சில் மயக்​கி, கையிருப்பை மட்​டும் அல்​லாமல் அவர்​களின் பொருட்​களை விற்​பனை செய்​தோ, அடமானம் வைத்தோ பணம் திரட்ட வைத்​து, அதை​யும் முதலீடு செய்ய வைத்து ஒட்​டுமொத்த பணத்​தை​யும் அபகரித்து விடு​வார்​கள்.

ஏமாந்​தவர்​களில் சிலர் வெளியே தெரிந்​தால் அவமானம் என எண்ணி மனதுக்​குள்ளே குமுறு​வார்​கள். அவர்​களது வாழ்​வும் நிலைகுலைந்து விடும். ஆனால், மோசடி கும்​பலோ வேறு நபருக்கு வலை விரிக்​கச் சென்று விடு​வார்​கள். இப்​படி, கோடிக்​கணக்​கான ரூபாயை சைபர் க்ரைம் மோசடி கும்​பல் பறித்​துள்​ளது. புகார் வரும் பட்​சத்​தில், அந்​தக் கும்​பலிடம் இருந்து ஓரளவு பணத்​தையே சைபர் க்ரைம் போலீ​ஸா​ரால் மீட்க முடிகிறது. மோசடிக்கு மூளை​யாக செயல்​படு​பவர்​கள் வெளி​நாடு​களில் இருப்​ப​தால் அவர்​களை அடை​யாளம் காண்​ப​தி​லும், கைது செய்​வ​தி​லும் சிரமம் உள்​ள​தாக போலீ​ஸார் தெரிவிக்​கின்​றனர்.

இதற்​கிடையே, சைபர் க்ரைம் மோசடி கும்​பல் சுருட்​டிய பணத்தை எப்​படி அவர்​களது வங்கி கணக்​குக்கு மாற்​றுகிறார்​கள் என்ற அதிர்ச்​சி​யூட்​டும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது. இதுதொடர்​பாக சைபர் க்ரைம் போலீஸ் அதி​காரி கூறிய​தாவது: அண்​மை​யில் தொழில் அதிபர் ஒரு​வரிட​மிருந்து ஆன்​லைன் வர்த்​தகம் பெயரில் ரூ.13 கோடி மோசடி செய்​யயப்​பட்​டது. அதில், முதல்​கட்​ட​மாக அந்த பணத்தை மோசடி கும்​பல் 26 வங்கி கணக்​கு​களுக்கு மாற்​றி​யுள்​ளது. தொடர்ந்து 225 வங்கி கணக்​கு​களுக்​கும் அதிலிருந்து 8,990, 1,518, 448 என்ற எண்​ணிக்​கை​யில் அடுத்​தடுத்து 11,493 வங்கி கணக்​கு​களுக்கு 48 மணி நேரத்​தில் மாற்றி பணத்தை சுருட்டி உள்​ளனர்.

குறிப்​பாக இந்த பணம் மகா​ராஷ்டி​ரா, உத்​தரப்​பிரதேசம், பஞ்​சாப், குஜ​ராத், தமிழ்​நாடு, அஸ்​ஸாம், பிஹார், ஹரி​யா​னா, உத்​ர​காண்ட், தெலங்​கானா என 15-க்​கும் மேற்​பட்ட மாநிலங்​களில் உள்ள வங்கி கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. இவற்​றைப் பின்​தொடர்ந்து மோசடிக் கும்​பலை கைது செய்​வது சாதாரண காரி​யம் அல்ல. இதனால்​தான் மோசடி பணத்தை மீட்​ப​தி​லும், நபர்​களைக் கைது செய்​வ​தி​லும் சவாலாக உள்​ளது.

எனவே, பொது​மக்​கள் விழிப்​போடு இருப்​பது மட்​டுமே மோசடி கும்​பலிட​மிருந்து தப்​பிக்​கும் ஒரே வழி. அதை​யும் மீறி யாரேனும் பணத்தை பறி​கொடுத்​திருந்​தால் ‘1930’ என்ற தொலைபேசி எண் மூல​மாக​வும், www.cybercrime.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக​வும் மற்​றும் அரு​கிலுள்ள காவல் நிலை​யத்​தி​லும் புகார் தெரிவிக்​கலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.