திருவனந்தபுரம்: கேரள லாட்டரி (Kerala lottery) பிரியர்களின் தலையில் இடியை இறக்கும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது இதுவரை 28 சதவீதம் என கேரள லாட்டரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் இருந்த நிலையில் தற்போது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியானது 40 சதவீத வரம்புக்குள் கொண்டு வந்து இருப்பதால் லாட்டரி விலை உயர்த்தப்படுமோ என்ற அச்சம் லாட்டரி பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது.
கேரளாவில் லாட்டரிகள் என்பது மிகவும் பிரபலம். மாநில அரசின் வருவாயில் கணிசமான பங்கு லாட்டரி மூலமாக கிடைக்கிறது. அங்கு தினந்தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. தினந்தோறும் ரூ.50 விலை கொண்ட டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக 1 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது.
அதேபோல, வருடத்திற்கு ஆறு பம்பர் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். இதன் முதல் பரிசு ரூ.25 கோடி ஆகும். இதனால் நமக்கும் ஒருநாள் அதிர்ஷ்டம் அடித்துவிடும் என்ற நம்பிக்கையில் கேரள லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்குகிறார்கள்.
இந்த நிலையில்தான் கேரள லாட்டரி பிரியர்களின் தலையில் இடியை இறக்குவது போல மத்திய அரசின் முடிவு அமைந்துள்ளது. அதாவது, கேரள லாட்டரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வரியானது 40 சதவீத வரம்புக்குள் கொண்டு வந்து இருப்பதால் லாட்டரி விலை உயர்த்தப்படுமோ என்ற அச்சம் லாட்டரி பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது.
லாட்டரி டிக்கெட் விலையை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கேரள அரசு ரூ.40ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தியது. இதனால் விலையை மீண்டும் உயர்த்தினால் கேரள லாட்டரி டிக்கெட் விற்பனையை கடுமையாக பாதிக்கும். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று லாட்டரி விற்பனையாளர்கள் தெரிவித்தனர். எனினும், டிக்கெட் விலை உயர்த்தப்படாது என்று கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் டிக்கெட் பரிசுத்தொகைகளின் எண்ணிக்கை மற்றும் ஏஜெண்ட் கமிஷன் உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், பரிசுத்தொகை எண்ணிக்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, தினசரி லாட்டரி டிக்கெட்டுகளுக்கான மொத்த பரிசுத்தொகையில், 6,500 பரிசுத்தொகை குறைக்கப்பட்டுள்ளது. முதல் பரிசுத் தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. எனினும், ரூ.5,000 மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக கேரளா லாட்டரி டிக்கெட் விற்பனையாளர்கள் கூறுகையில், “ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டு இருப்பதால் பரிசுத்தொகையில் வரி பிடித்தம் அதிகமாக இருக்கும். பரிசாக வெல்லும் தொகையில் கிட்டத்தட்ட பாதி தொகை வரி பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.” இதற்கு லாட்டரி பிரியர்களும் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். கமிஷன் தொகை குறைப்பு, வரி அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எதிராக கடையடைப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.
தற்போது கேரளாவில் பரிசு அடிக்கும் டிக்கெட்டுகளை விற்பனை செய்த ஏஜெண்ட்களுக்கு கமிஷன் தொகையாக மொத்த பரிசுத்தொகையில் 12 சதவீதம் அளிக்கப்படுகிறது. ஆனால் இனி இந்த கமிஷன் தொகை 9 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி மாற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.