விஜய்யுடன் கூட்டணி பேச்சு வார்த்தையா..? சனிக்கிழமை பிரசாரத்தை பார்த்து மனம் மாறிய ராகுல்.!!

மிழக அரசியல் களத்தில் சமீப காலமாகவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் அனைத்தும் தங்களுக்கான வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கடந்த காலங்களில் முக்கிய பங்காற்றியபோதும், தற்போதைய சூழலில் அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகார பங்கு குறித்து அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “தி.மு.க. கூட்டணியில் நாம் சக்கையாக மட்டுமே இருக்கிறோம், சாற்றை திமுக மட்டுமே அனுபவித்து வருகிறது” என்று பகிரங்கமாகவே பேசியது, இந்த அதிருப்தியை உறுதிப்படுத்தியது. மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தியை த.வெ.க. கூட்டணியுடன் இணைவது குறித்து பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிக இடங்களை எதிர்பார்க்கின்றனர். விசிக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரணங்களால், தி.மு.க. கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. ஆனாலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ போன்ற தலைவர்கள், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் கட்சி துவங்குவதற்கு முன்பிருந்தே, ராகுல் காந்திக்கும் அவருக்கும் இடையே இ-மெயில் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு இருந்து வருவதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மேலும், சமீபத்தில் விஜய் அளித்த பேட்டிகளிலும், அவர் பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற கட்சிகளை நேரடியாக விமர்சித்தாலும், காங்கிரஸை விமர்சிக்கவில்லை. இது, காங்கிரஸ் மற்றும் த.வெ.க. இடையே கூட்டணி அமைவதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி, த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தால், அதிக இடங்கள் மற்றும் அமைச்சரவையில் பங்கு பெறுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், 60 தொகுதிகள், ஒரு துணை முதல்வர் பதவி மற்றும் 4 அமைச்சர்கள் பதவிகளை காங்கிரஸ் கட்சி கேட்கலாம் என்றும், இதற்கு சோனியா காந்தி பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் பரபரப்பான தகவல்கள் உலா வருகின்றன.

தற்போதைய அரசியல் சூழலில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தமிழகத்தில் வலுவாக இருந்தாலும், விஜய் தனது கட்சியின் மூலம் இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் மற்றும் த.வெ.க. கூட்டணி அமைத்தால், அது தி.மு.க. கூட்டணிக்கு ஒரு சவாலை ஏற்படுத்தும்.

இவை அனைத்தும் ஊகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் அரசியல் வதந்திகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், தமிழக அரசியல் அவ்வப்போது எதிர்பாராத திருப்பங்களை சந்தித்து வந்துள்ளது. எனவே, வரும் நாட்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை உறுதியாகக் கணிக்க முடியாது.