தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தாமும் செப்டம்பர் 9-ந் தேதி டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டோம்; அது நடக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அண்ணாமலை தொடர்பாக கூறியதாவது: அண்ணாமலை என்னுடன் தொடர்பில் இருந்து வருகிறார். தினமும் என்னுடன் பேசுகிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய என் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரது உடல்நலன் குறித்து பேசினேன். அவர் என்னை சந்திக்க வருவதாக சொல்லி இருக்கிறார். அதைத்தான் பிரஸ் மீட்டில் அண்ணாமலையும் கூறி உள்ளார்.
கடந்த செப்டம்பர் 9-ந் தேதியன்று நானும் அண்ணாமலையும் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தோம். அன்றைய தினம், துணை ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதனால் திட்டமிட்டபடி டெல்லி பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.
அண்ணாமலை, அமமுக தொண்டரோ, அமமுக நிர்வாகியோ இல்லை. பாஜகவைச் சேர்ந்தவர் அண்ணாமலை. பாஜக என்ன சொல்கிறதோ அதைத்தானே அவர் சொல்ல முடியும். அவருக்கு என தனிப்பட்ட கருத்துகள் இருக்கிறது என அவரே சொல்லி இருக்கிறார்.
ஆனால் நயினார் நாகேந்திரன், பாஜக கூட்டணியில் யார் இருக்க வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என சொன்னார்; அதனால்தான் அந்த கூட்டணியை விட்டு வெளியே வந்தேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
அதிமுகவில் போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் டெல்லியில் செப்டம்பர் 8-ந் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதனை செங்கோட்டையனும் உறுதி செய்தார்.இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியையும் டெல்லி அழைத்து பேசினார்கள் . டிடிவி தினகரன் இதை உறுதி செய்துள்ளது டிடிவி தினகரன் பேட்டி. கடந்த செப்டம்பர் 16-ந் தேதி எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.