ரூ .10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ஊராட்சி செயலாளர் சஸ்பென்ட்.

கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொண்டையம்பாளையம் ஊராட்சி .இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த விக்ரம் ராஜ் தனது மாமியார் தங்கம்மாள், தன்னுடைய மனைவி கஸ்தூரி ஆகியோருக்கு சொந்தமான அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவான 4 சென்ட் மற்றும் 2 சென்ட் நிலங்களை வரன்முறைப்படுத்த அங்குள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார் .அங்கு இதற்கான விண்ணப்பத்தை ஊராட்சி செயலாளர் முத்துசாமியிடம் கொடுத்துள்ளார். அப்போது நிலத்தை பார்வையிட்டு சர்க்கார் சாம குளம் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு பரிந்துரை செய்து அவரிடம் வரன்முறை உத்தரவு பெற்று அதனை வழங்க ரூ. 10ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று விக்ரம் ராஜிடம் ஊராட்சி செயலாளர் முத்துசாமி கேட்டாராம் .முறையான ஆவணங்கள் இருந்தும் லஞ்சம் கேட்டதால் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விக்ரம் ராஜ் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ 10 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர். பின்னர் அந்த பணத்தை விக்ரம் ராஜ் ஊராட்சி செயலாளர் முத்துசாமியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல்துணை சூப்பிரண்டு ராஜேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம் ,எழிலரசி மற்றும் போலீசார் முத்துசாமியை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர் .பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முறைப்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான கொண்டையம்பாளையம் ஊராட்சி செயலாளர் முத்துசாமியை பணியிட நீக்கம் (சஸ்பென்ட்) செய்து எஸ். எஸ். குளம். வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.