ஏன்..? என்னாச்சு!! கூகுள் நிறுவனத்துக்கு 30 ஆயிரம் கோடி அபராதம்-கடுப்பான டிரம்ப்.!!

ஜெனிவா: கூகுள் நிறுவனம் ஆன்லைன் விளம்பரச் சந்தையில் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி போட்டி விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்திற்கு 2.95 பில்லியன் யூரோ (சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

ஆன்லைன் விளம்பரங்களை எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் தொழில்நுட்பத்தில் , கூகுள் தனது சொந்த தயாரிப்புகளுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பொதுவாக இன்றைக்கு ஆன்லை விளம்பரங்களை பொறுத்தவரை, கூகுள் தான் எந்த பொருளை மக்கள் வாங்க வேண்டும். எந்த பொருளை காட்ட வேண்டும் என்பதை முடிவு செய்கிறது. அதாவது கூகுளை பொறுத்தவரை விளம்பரம் கொடுத்தால் அந்த பொருளை மக்களுக்கு அதிகமாக காட்டுகிறது. அதேபோல் கூகுளில் விளம்பரம் செய்தால், அந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை தான் சர்ச்சில் முன்னிலையில் காட்டும். ஆனால் இது போட்டியாளர்களுக்கு இடையே வேற்றுமையை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதனால் அந்த நாடுகளின் அரசுகள் கூகுளுக்கு அபராதம் விதிப்பது அவ்வப்போது நடக்கிறது.

அந்த வகையில்,கூகுள் நிறுவனம் ஆன்லைன் விளம்பரச் சந்தையில் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி போட்டி விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்திற்கு 2.95 பில்லியன் யூரோ (சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதித்திருக்கிறது.

ஐரோப்பிய ஆணையம் (European Commission) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், “ஆன்லைன் விளம்பரங்களை எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் தொழில்நுட்பத்தில் (ad tech) கூகுள் தனது சொந்த தயாரிப்புகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டிருக்கிறது. இதனால் அதன் போட்டி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன,. உலகம் முழுவதும் உள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள், கூகுளின் ஆன்லைன் தேடல் மற்றும் விளம்பரத்தில் ஆதிகக்கம் செலுத்துவதை மிகவும் கவனத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது.

ஆனால் இந்த முடிவு “தவறானது” என்றும், தாங்கள் மேல்முறையீடு செய்வோம் என்றும் கூகுள் நிறுவனம் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறது. கூகுளின் உலகளாவிய ஒழுங்குமுறை விவகாரத் தலைவர் லீ-ஆன் முல்ஹோலாண்ட் கூறுகையில், “இந்த அபராதம் நியாயமற்றது. மேலும், இதன் மூலம் ஐரோப்பாவில் உள்ள ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் தங்கள் வருவாயை ஈட்டுவது கடினமானதாக மாறிவிடும்.. இது அவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விளம்பரங்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களுக்குச் சேவைகளை வழங்குவது என்பது போட்டிக்கு எதிரானது கிடையாது. மேலும், எங்களின் சேவைகளுக்கு இப்போது முன்பைவிட அதிக மாற்று வழிகள் இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இந்த முடிவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். தனது சமூக வலைத்தளப் பதிவில், இந்த நடவடிக்கை “மிகவும் நியாயமற்றது” என்று கூறிய அவர், ஐரோப்பிய தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்தி, வரி விதிப்புகளை (tariffs) அமல்படுத்த நேரிடும் என்று நேரடியாக மிரட்டியுள்ளார். டிரம்ப் மேலும் கூறுகையில், “நான் ஏற்கனவே கூறியது போல, இந்த பாகுபாடு நிறைந்த நடவடிக்கைகளை எனது அரசு நிர்வாகம் நிச்சயம் அனுமதிக்காது. ஐரோப்பிய யூனியன் இந்த நடைமுறையை அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக நிறுத்த வேண்டும்” இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்,

இது ஒருபுறம் எனில், கடந்த சில மாதங்களாக, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் விதித்து வரும் அபராதங்கள் மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இருப்பினும், ஆன்லைன் விளம்பரச் சந்தையில் கூகுளின் ஏகபோக உரிமைக்கு எதிராக அமெரிக்க அரசும் வழக்குகள் தொடுத்திருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ள அபராதங்களில் இதுவரை இல்லாத ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டு, ஐரோப்பிய யூனியன், கூகுளுக்கு 4.34 பில்லியன் யூரோ அபராதம் விதித்திருந்து. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்தி சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. 2016 ஆம் ஆண்டு, மற்றொரு வழக்கில் 2.4 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய ஆணையத்தின் செயல் துணைத் தலைவர் தெரசா ரிபேரா கூறுகையில், ” நாங்கள் வழக்கம் போலவே, கூகுளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை உயர்த்தியுள்ளோம். ஏனென்றால், விதிகளை மீறுவது கூகுளுக்கு இது மூன்றாவது முறை. தனது நடைமுறைகளை எப்படி மாற்றுவது என்பது குறித்து 60 நாட்களுக்குள் கூகுள் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றிய ஆணையமே தீர்வு காணும். கூகுள் அதன் விளம்பர தொழில்நுட்ப வணிகத்தின் சில பகுதிகளை விற்பது போன்ற ஒரு கட்டமைப்பு சீர்திருத்தம் மட்டும் தான், இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழியாகத் தெரிகிறது ” என்று கூறினார்.