இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் – நிர்மலா சீதாராமன்.!!

டெல்லி: இந்தியா ரஷ்யாவிடமிருந்த அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா நமக்கு 25% அளவுக்கு வரியை போட்டு மொத்த வரியை 50% ஆக ஏற்றி தலையில் இறக்கியிருக்கிறது.

இருப்பினும், ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

“இந்தியா, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும். இந்த முடிவு தேச நலனுக்கு முன்னுரிமை அளித்து எடுக்கப்பட்டது. தேவைக்கு வாங்குவது நமது முடிவு. எங்கிருந்து வாங்க வேண்டும் என்பதையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

ரஷ்யா சலுகை விலையில் நமக்கு கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து வருகிறது. இதனால் உலக அளவில் ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இந்த வர்த்தகம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்களை உறுத்துகிறது. எனவே எண்ணெய் வணிகத்தை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அப்படி நடந்தால் அரபு நாடுகளைதான் நாட வேண்டி வரும். அரபு நாடு சும்மா தராது. அதாவது அமெரிக்க டாலரை வாங்கிக்கொண்டு தரும். இது அமெரிக்காவுக்குதான் லாபம்.

ஆனால் ரஷ்யா இந்தியா ரூபாயை வாங்கிக்கொண்டு தருகிறது. எனவேதான் நாம் ரஷ்யாவிடம் அதிக அளவில் எண்ணெய் வாங்குகிறோம். எண்ணெய்க்கு எண்ணெய்யும் ஆச்சு, சொந்த காசில் வர்த்தகமும் நடந்த மாதிரி ஆச்சு. டாலருக்கு எதிராக சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்வது டிரம்ப்பு பிடிக்கவில்லை.

இந்த சூழலில்தான் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை தொடர்ந்து வாங்குவோம் என நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.