காதலி இறந்த விரக்தியில் காதலனும் தற்கொலை..

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் தனுஷ் (வயது 21 )கோழிக்கடை ஊழியர் .இவருக்கும் அங்குள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி மகிழ்ந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி ஓணம் பண்டிகை கொண்டாட தனது சொந்த ஊரான கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதிக்கு சென்றார் .அவர் அங்குள்ள ஒரு ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அந்த மாணவி சொந்த ஊருக்கு சென்றபோது தனுசுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி கொண்டு இருந்துள்ளார். கடந்த 2 நாட்களாக குறுஞ்செய்தி எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த தனுஷ் காதலியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது . அதைக் கேட்டு அதிர்ச்சிஅடைந்த தனுஷ் கதறி அழுதார். காதலி இல்லாத உலகில் நான் எப்படி வாழ முடியும்? என்று நண்பர்களிடம் புலம்பினார். துக்கம் தாங்க முடியாமல் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் .இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல் காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.