வாஷிங்டன்: அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”அமெரிக்காவின் தாராள மனப்பான்மையை வெளிநாட்டு மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு உயர்கல்வி படிப்புக்களில் நிரந்தரமாக சேர்ந்து நாட்டில் தங்குவதற்காக என்றென்றும் மாணவர்களாக மாறிவிட்டனர்.
நீண்டகாலமாக கடந்த கால நிர்வாகங்கள் வௌிநாட்டு மாணவர்களையும் பிற விசா வைத்திருப்பவர்களையும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட காலவரையின்றி தங்க அனுமதித்துள்ளன. இது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தி உள்ளது. இது அமெரிக்க குடிமக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய முன்மொழியப்பட்ட விதியானது குறிப்பிட்ட விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படும் கால அளவை கட்டுப்படுத்துவதன் மூலமாக அந்த துஷ்பிரயோகத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார். புதிய விதிகளின்படி, வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா உள்ளவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கும், வெளிநாட்டு ஊடக ஊழியர்களுக்கான ஆரம்ப சேர்க்கை காலமான 240 நாட்களாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.