புதுடெல்லி: புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. சைபர் யுத்தம், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவையே எதிர்காலப் போர்களை வடிவமைக்க உள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். துல்லியமாக வழிநடத்தப்படும் ஆயுதங்கள், நிகழ்நேர நுண்ணறிவு மற்றும் தரவு சார்ந்த தகவல்கள் ஆகியவையே இப்போது எந்தவொரு யுத்தத்திலும் வெற்றிக்கான அடித்தளமாக மாறிவிட்டன.
நவீன போர்கள் இனி நிலம், கடல் மற்றும் வான்வெளியுடன் மட்டும் கட்டுப்படுத்தப்படாது. இனி அவை விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் வரை விரிவடையும். செயற்கைக்கோள் அமைப்புகள், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் விண்வெளி கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவை அதிகாரத்தின் புதிய கருவிகளாகும். தொழில்நுட்பம், ஒரு புதுமையை முழுமையாகப் புரிந்துகொள்ளும் நேரத்தில், இன்னொன்று உருவாகி, போரின் போக்கையே முற்றிலுமாக மாற்றும் அளவுக்கு உலகம் வேகமாக முன்னேறி வருகிறது’ இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.