தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் பேச்சு வார்த்தை தோல்வி..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்ட நிர்வாகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சூப்பர்வைசர்கள் மற்றும் திறன் படைத்த தொழிலாளர்களுக்கு 1.7.2025 முதல் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தொழிற்சங்கங்களின் கோரிக்கையின்படி ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்கம் தரப்பில் தோட்ட தொழிற்சங்கங்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று கோவை ஏ.டி.டி. காலனியில் உள்ள தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்கத்தின் சார்பில் உட்பிரையர் குரூப் துணைத்தலைவர் பாலசந்திரன், பாரி அக்ரோ துணைத்தலைவர் முரளிபடிக்கல், தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்க செயலாளர் பிரதீப்குமார், டாடா காபி முதுநிலை பொதுமேலாளர் அச்சையா, டீ எஸ்டேட்ஸ் இந்தியா முதுநிலை பொதுமேலாளர் ரஞ்சித்கட்டபுரம், வாட்டர்பால்ஸ் குரூப் பொது மேலாளர் விக்ரம் குசலப்பா மற்றும் ஜெயஸ்ரீ குரூப் பொது மேலாளர் ரஞ்சித், பரிதோஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தொழிற்சங்கங்கள் தரப்பில் அண்ணா தொழிற்சங்க தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வி.அமீது, ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வி.பி.வினோத்குமார், தலைவர் சவுந்திரபாண்டியன், ஐ.என்.டி.யூ.சி தலைவர் ராமச்சந்திரன், பொதுசெயலாளர் கருப்பையா, ஏ.ஐ.டி.யூ.சி. பொது செயலாளர் மோகன், செயலாளர் ஜீவா, வி.சி.க. வீரமணி, கேசவமருகன் மற்றும் பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர். நண்பகல் 12 மணி அளவில் தொடங்கி மாலை 4 மணி வரை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தொழிற்சங்கம் தரப்பில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்யாமல் 1.7.2025 முதல் தற்போது பெற்று வரும் சம்பளத்தை விட நாள் ஒன்றுக்கு இடைக்காலமாக ரூ.50 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நிர்வாகத்தரப்பில் நீலகிரி தோட்ட அதிபர்கள் சங்கம் மற்றும் நீலகிரி வயநாடு தோட்ட அதிபர்கள் சங்கம் தங்களது உறுப்பினர் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1.7.2025 முதல் தினக்கூலி ரூ.475 என்ற அடிப்படையில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு விட்டதால் தொழிற்சங்கங்கள் கேட்கும் ஊதிய உயர்வை வழங்கிட இயலாது என்றும், மேற்படி 2 பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி ரூ.475-க்கு அதிகமாக தினக்கூலி வழங்க முடியாது என்றும், தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்கத்தில் உள்ள இரண்டு அமைப்புகள் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி 1.7.2025 முதல் 70 சதவீதம் தொழிலாளர்கள் ஊதியத்தை பெற்று வரும் நிலையில், 30 சதவீதம் தொழிலாளர்களுக்கு ரூ.475-ஐ விட அதிகமாக தினக்கூலி வழங்க முடியாது. அந்த ஒப்பந்தம்படி கூலி வழங்குவதால் அதைத் தவிர நாங்கள் எந்த மாற்றமும் செய்ய முடியாது. அல்லது நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று தோட்ட தொழிலதிபர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர். மேலும் தொழிற்சங்கங்கள் எந்த தேதியில் ரூ.475-க்கு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டதோ அப்போது முதல் தான் ஊதியம் வழங்கமுடியும் என்றும் அரசு தேயிலைத் தோட்ட கழகத்திலேயே தனியாருக்கு நிகராக ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணையிட்டு உள்ளதை தொழிற்சங்கங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இந்த தொழிலை நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையிலும் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தனர்.
இதை தொழிற்சங்கம் தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் தொழிலாளர்களுடன் ஒப்புதல் பெறாமல் எந்த ஒப்பந்தத்துக்கும் தொழிற்சங்கங்கள் முன்வர மாட்டோம் என்றும் கூறியுள்ளனர் இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்