ஷாக் ஆன நகை பிரியர்கள்… வரலாறு காணாத உச்சம்… ஒரு சவரன் இவ்வளவு அதிகமா..?

சென்னை: தங்கம் விலை மீண்டும் ரூ.75ஆயிரத்தை தாண்டி, தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகப் பொருளாதார நிலை, முதலீட்டு போக்குகள், மற்றும் பண்டிகை காலங்களில் தேவை அதிகரிப்பது போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. மேலும், டிரம்ப் பதவியேற்பு, உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போர் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என மாறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்தடுத்து வரவிருக்கும் சுப முகூர்த்த நாட்கள், திருமணங்கள் காரணமாக தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ரூ.74 ஆயிரம், ரூ.75 ஆயிரம் என உயர்ந்து கொண்டே இருப்பது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தின நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 355-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 390-க்கும், ஒரு பவுன் ரூ.75,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.