கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதனிடையே உக்ரைன் கடந்த 24ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தனது 34வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதையொட்டி உக்ரைன் மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். மோடியின் வாழ்த்துகளுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி தன் எக்ஸ் தள பதிவில், “உக்ரைன் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி. அமைதியை உருவாக்க முயற்சிக்கும் இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். இப்போது முழு உலகமும் இந்த கொடூரமான போரை கண்ணியத்துடனும், நீடித்த அமைதியுடனும் முடிவுக்கு கொண்டு வர பாடுபடுகையில் இதில் இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் பெரிதும் நம்புகிறது. ராஜதந்திரத்தை வலுப்படுத்தும் ஒவ்வொரு முடிவும் ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்திய-பசிபிக் பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பாலும் சிறந்த பாதுகாப்புக்கு வழிவகுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.