டிரம்பிற்கு செக்… ஓன்று சேரும் இந்தியா- சீனா- ரஷ்யா… இனி உலக அரசியலில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.!!

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளிடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே டிரம்பிற்கு செக் வைக்கும் வகையில் இந்தியா- சீனா- ரஷ்யா இப்போது மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுக்கப் போகிறது. இது நிஜமாகவே டிரம்பிற்கு ஒரு எச்சரிக்கை மெசேஜ்ஜை அனுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலக நாடுகளிடையே டிரம்ப்பின் நடவடிக்கை எதிர்ப்புகளையே சம்பாதித்து வருகிறார். அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதே டிரம்ப் தேவையில்லாத நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அப்படித் தான் டிரம்ப் இந்தியா மீதும் 50% வரியை விதித்துள்ளார். அதில் 25% வரி ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 25% வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது.

டிரம்ப்பின் இதுபோன்ற நடவடிக்கைகளால் உலக அரசியல் மெல்ல மாறி வருகிறது. ரஷ்யா இந்தியா இடையே பல காலமாக இருந்த நட்பு, டிரம்ப் அத்துமீறல்களால் இன்னும் வலிமையாகி இருக்கிறது. அதேபோல இந்தியா சீனா இடையே கல்வான் மோதலுக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்த சூழலில், அதுவும் மெல்லச் சீராகி வருகிறது. சமீபத்தில் கூட சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சீனா செல்கிறார். இரு நாட்டு உறவு சீராகி வரும் சூழலில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல ரஷ்ய அதிபர் புதினும் கூட ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சீனா செல்கிறார்.

இதற்கிடையே ஷாங்காய் உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதினை சீன அதிபர் ஜி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் வரவேற்கவுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகளவில் வரிகளை விதித்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்தச் சூழலில் ஆசியாவின் 3 முக்கிய நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடுவது ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் புதின் மட்டுமின்றி, மத்திய ஆசியா, மத்தியக் கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2001 முதல் இந்த ஷாங்காய் உச்சி மாநாடு நடக்கும் நிலையில், இது மிகப் பெரிய மாநாடாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு, 2024இல் கசானில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் ஜி ஜின்பிங்குடன் ஒரு நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றிருந்தார். இருப்பினும், அது ரஷ்யாவில் நடந்த கூட்டமாகும். இப்போது தான் பிரதமர் மோடி 7 ஆண்டுகளில் முதல்முறையாகச் சீனாவுக்குச் செல்கிறார்.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும் என்று நம்புவதாகச் சமீபத்தில் தான் டெல்லியில் உள்ள ரஷ்யத் தூதரக அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்தச் சூழலில் தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரடியாக மோடி, புதினை நேரடியாக வரவேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தி சீனா-குளோபல் சவுத் ப்ராஜெக்ட் ஆய்வு நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் எரிக் ஓலாண்டர் கூறுகையில், “அமெரிக்காவுக்கு எதிராக ஓரு போட்டி இருக்கிறது என்பதை இந்த மாநாடு மூலம் ஜின்பிங் காட்ட விரும்புவார். ஜனவரி முதல் சீனா, ஈரான், ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், எதிலும் விரும்பிய முடிவுகள் அமெரிக்காவுக்குக் கிடைக்கவில்லை என்பதையே இந்த உச்சி மாநாடு காட்டுகிறது.

பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சி டிரம்பிற்கு கவலை கொடுத்துள்ளது என்பது உண்மை. இதன் காரணமாகவே டிரம்ப் ஏதேதோ செய்து வருகிறார் இதுபோன்ற குழுக்களின் நோக்கம் அதுதான். இந்த உச்சிமாநாடு மிகவும் வலுவான பிம்பத்தை அமெரிக்காவுக்கு மெசேஜ்ஜாக அனுப்பும். டிரம்ப்பிற்கு சிக்கலைத் தான் கொடுக்கும்” என்றார்.