அமெரிக்க அதிபரின் பிடிவாதம்… இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்த டிரம்ப்.!!தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பு.!!

வாஷிங்டன்: இந்திய பொருட்களுக்கு இன்று முதல் 50 சதவீத கூடுதல் வரிவிதிப்பை அமெரிக்கா அமல்படுத்துகிறது.

இதனால் தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். முதலில் இந்திய பொருட்கள் மீது தற்போது உள்ள வரியுடன் சேர்த்து கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக மேலும் 25 சதவீதம் வரி என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தார். இந்த சூழலில் அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு சென்று ரஷ்ய அதிபர் புடின் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியா மீதான வரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இன்று முதல் இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கான பொது அறிவிப்பை அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, புதிய 25% கூடுதல் வரி, இன்று (ஆக. 27) காலை 9.31 மணி (இந்திய நேரப்படி) முதல் அமலுக்கு வரும். இந்த அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள இந்தியப் பொருட்களுக்கு இந்த கூடுதல் வரி பொருந்தும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு, நுகர்வுக்காக அமெரிக்காவிற்குள் நுழையும் அல்லது கிடங்குகளிலிருந்து நுகர்வுக்காக எடுக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்த வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கூடுதல் வரி உயர்வால், அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஆயத்த ஆடைகள், அணிகலன்கள், தோல் பொருட்கள், கடல் சார் உணவுகள், வேதிப்பொருட்கள், தானியங்கி ஊர்திகள், இரும்பு, எஃகு உள்ளிட்ட முக்கியத் துறைகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். இந்த வரி விதிப்பால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.4 விழுக்காடு வரை சரியக்கூடும் என உலகளாவிய வர்த்தக ஆய்வு முனைவகம் கணித்துள்ளது. அதே வேளையில், அமெரிக்காவின் மருந்துத் தேவையில் பெரும்பங்கை வகிக்கும் இந்திய மருந்துப் பொருட்கள், குறைக்கடத்திகள், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை 50% வரியிலிருந்து இடைக்கால விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவால் இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும் பிரதமர் மோடி, அமெரிக்காவின் வரிவிதிப்பு பற்றி கவலைப்படவில்லை. உள்ளூர் பொருட்கள் விற்பனையை அதிகரிப்போம் என்ற புதிய கோஷத்தை அவர் தொடங்கி இருக்கிறார இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது. அமெரிக்கா விதித்த காலக்கெடுவுக்குள் இந்தியா தன் சொல் பேச்சை கேட்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நினைத்திருந்தார். ஆனால் பிரதமர் மோடி எந்தவித சமரசத்திற்கும் தயாராக இல்லை என்பதை சுதேசி விற்பனையை அதிகரிக்க வேண்டும்.

சுதேசி பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக கடையில் பேனர் வைக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோள் உறுதி செய்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக அமெரிக்க வரி விதிப்புகளில் இருந்து ஏற்​றும​தி​யாளர்​களை பாது​காக்க, இந்​தியா சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த தயாரித்து வருவதாகவும், புதிய விரி​வான உத்திகளு​டன் கூடிய இந்த ஏற்​றுமதி திட்​டங்கள் விரைவில் அறவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய ஏற்​றுமதி ஊக்​கு​விப்பு திட்​டம், கடன் அணுகலை எளி​தாக்​கு​வதை​யும், சர்​வ​தேச சந்​தைகளில் வரி அல்​லாத தடைகளை நிவர்த்தி செய்​வதை​யும் மைய​மாகக் கொண்​டிருக்​கும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘பிராண்ட் இந்தியா’ என்ற பெயரில், ரூ.20,000 கோடி மதிப்பிலான புதிய திட்​டம் உரு​வாக்​கப்​படு​வ​தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜவுளி, ஆடை, ரத்தினக் கற்கள், நகைகள், இறால், தோல், காலணிகள், ரசாயனங்கள், மின் மற்றும் இயந்திர இயந்திரங்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும்

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு அமெரிக்காவுக்கு ரூ.7.50 லட்சம் கோடி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 66 சதவீதம் பாதிப்பை சந்திக்கும்.

மருந்துகள், மின்னணுவியல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் உட்பட சில பொருட்களுக்கு தொடர்ந்து 50 சதவீத வரியிலிருந்து விலக்கு அளித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

ஜெர்மன் பத்திரிகை தகவல்இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி பிரச்னையில் அதிபர் டிரம்ப் 4 முறை பிரதமர் மோடியை தொடர்பு கொண்டும், பிரதமர் மோடி பேசுவதற்கு மறுத்துவிட்டதாக ஜெர்மன் செய்தித்தாள் பிராங்க் பர்ட்டர் ஆல்ஜெமைன் தெரிவித்துள்ளது. இந்தியா மீது அதிகப்படியாக விதிக்கப்பட்ட வரியால் பிரதமர் மோடியின் கோபத்தின் ஆழத்தின் விளைவாகவும், அவரது எச்சரிக்கையின் விளைவாகவும் இது நடந்துள்ளதாக அந்த செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாட்டு போரின் போது 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், எனது தலையீட்டாலேயே போர் நின்றதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில் தென்கொரிய அதிபருடனான சந்திப்பின்போது பேசிய டிரம்ப், ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கவிருந்தது ஒருவிதமான அணு ஆயுதப் போர். மோதல் உச்சத்தில் இருந்தபோது 7 விமானங்கள் ஏற்கனவே சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன’ என்றார். ஆனால் 6 பாக். விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்த எண்ணிக்கையை விட அதிகமாகக் குறிப்பிட்டு டிரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநர் லிசா குக்கை பதவியில் இருந்து நீக்கி டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். லிசா குக் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக அவரை நீக்குவதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட கடிதத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஏற்றுமதிக்கு இந்தியாவுக்கு போட்டியாக பல்வேறு நாடுகள் இருந்தாலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களைப்போல் முக்கிய பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் வங்கதேசம், வியட்நாம், இலங்கை, கம்போடியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் இனிமேல் இந்தியாவின் இடத்தை பிடிக்கும். இந்த நாடுகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். சீனா, மெக்சிகோ, துருக்கி, பாகிஸ்தான், நேபாளம், குவாத்தமாலா மற்றும் கென்யா போன்ற நாடுகள் கூட ஆதாயம் அடையலாம்.

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் சீனா மீது நடவடிக்கைகளை எடுப்போம் என்று எச்சரித்துள்ளார். இதனால் நவம்பர் 10ம் தேதி வரை சீனாவுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை.