“டாப் பணக்காரர் To மோசடியாளர்”… அனில் அம்பானி..? பேங்க் ஆப் இந்தியா அதிரடி அறிவிப்பு.!!

சென்னை: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை கடன் மோசடியாளர் என்று பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியிருக்கிறது..

இது தொடர்பாக அனில் அம்பானிக்கு வங்கி முறைப்படி தகவல் தெரிவித்திருக்கிறது.. கடந்த 2 நாட்களாக அனில் அம்பானி வீட்டில் சிபிஐ ரெய்டு அதிரடியாக நடந்த நிலையில், இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருப்பது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி செய்த முறைகேடுகளால் எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.2 ஆயிரத்து 929 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது..

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தை மோசடி நிறுவனம் என்று

கடந்த ஜூன் மாதம் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்தது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி, சிபிஐயில் புகார் தந்தது..

அந்த புகாரில், “ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் பல்வேறு வங்கிகளுக்கு ரூ.40000 கோடிக்கு மேல் கடன் நிலுவை வைத்திருக்கிறது.. இதில் ஸ்டேட் வங்கிக்கு மட்டும் ரூ.2929.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புகார் தொடர்பாக சிபிஐ ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் அதன் நிறுவனர் அனில் அம்பானி மீது குற்றச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

ரிலைன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் ஸ்டேட் வங்கியில் இருந்து கடன் வாங்கி அதை தவறாக பயன்படுத்தியதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், வழக்கு தொடர்பாக நேற்றுமுன்தினம் காலை மும்பையிலுள்ள அனில் அம்பானியின் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனையை மேற்கொண்டது.. கப்பரேடு பகுதியிலுள்ள அனில் அம்பானியின் சீவின்டு வீட்டுக்கு அதிகாரிகள் திடீரென சென்றனர்.. ஆனால், வீட்டில் அனில் அம்பானி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல சிபிஐ அதிகாரிகள் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் அலுவலகத்திலும் சோதனை நடத்தினார்கள்..

அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ஏற்கனவே சோதனை நடத்தியிருந்த நிலையில், வங்கி மோசடி வழக்கில் தொழில் அதிபர் அனில் அம்பானி வீட்டில் சிபிஐ நடத்திய இந்த சோதனை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது..

ஆனால், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அனில் அம்பானி மறுத்துள்ளார். எஸ்பிஐ கடன் மோசடி வழக்கில் தன் மீது திட்டமிட்டு தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்படுவதாகவும், ரூ.2,929 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறும் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை என்றும் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடன் ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயல்பட்டதாக கூறி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானியின் கடன் கணக்குகளை மோசடி கணக்குகள் என்று பேங்க் ஆப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் கடனை திருப்பி செலுத்தவும், மூலதன செலவினங்களுக்காகவும் 724.78 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டதாகவும், இதில் பாதி தொகையை ஒரு பிக்சட் டிபாசிட் கணக்கில் முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, கடந்த 2017ம் வருடத்திலேயே இந்த கடன் கணக்கு வாராக் கடனாக வகைப்படுத்தப்பட்டதாகவும், கடனை திருப்பிச் செலுத்த தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், இதுவரை தங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம், ரூ.1050 கோடி கடன் நிலை காரணமாக கனரா வங்கியும், அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தை கடன் மோசடியாளராக அறிவித்திருந்தது.. ஆனால், இது தொடர்பாக தனக்கு முறைப்படி தகவல் தரவில்லை என்று அனில் அம்பானி மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்..

இதையடுத்து, தனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக கனரா வங்கி அறிவித்தது.. இதற்குபிறகுதான் தற்போது எஸ்பிஐ மற்றும் பாங்க் ஆப் இந்தியா அனில் அம்பானிக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அதற்குபிறகு கடன் மோசடியாளராக அறிவித்திருக்கிறது.

பொதுவாக, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஒரு வங்கிக் கடன், மோசடி என்று வகைப்படுத்தப்பட்டவுடன், வங்கிகள் அதை 21 நாட்களுக்குள் ரிசவர்வ் வங்கி, சிபிஐ மற்றும் காவல்துறைக்கு தெரிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.