நயினார் நாகேந்திரன் வீட்டில் அமித் ஷாவிற்கு வைத்த தேநீர் விருந்தில் அண்ணாமலையுடன் முக்கிய ஆலோசனை..!

நெல்லை: நெல்லை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வீட்டில் வைத்து தேநீர் விருந்து கொடுத்துள்ளார்.

அந்த தேநீர் விருந்தின் போது நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரிடமும் அமித்ஷா தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக பாஜக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 தொகுதிகளுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் நெல்லையில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அதேபோல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாலை 3 மணியளவில் நடந்த மாநாட்டில் அமித்ஷா பேசுகையில், திமுகவை வேரோடு பிடுங்கி எறியும் வகையில் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.

சோனியா காந்திக்கு தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று ஆசை. ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்று ஆசை. இந்த இரு ஆசைகளும் நிறைவேறப் போவதில்லை. ஒருநாளும் உதயநிதி ஸ்டாலினால் தமிழ்நாட்டில் முதல்வராக முடியாது என்று ஆவேசமாக தெரிவித்தார்.

இதன்பின் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. பூத் கமிட்டி மாநாடு நடந்த இடம் நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதிக்கு உட்பட்ட இடமாகும். இதனால் அமித்ஷாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று நயினார் நாகேந்திரன் தேநீர் விருந்து கொடுத்துள்ளார்.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வந்த போது, தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்து பிரம்மாண்ட விருந்து கொடுத்தார். அதேபோல் சில வாரங்களுக்கு முன் நெல்லை வந்த எடப்பாடி பழனிசாமிக்கும் மிகப்பெரிய விருந்து ஒன்றை நயினார் நாகேந்திரன் அளித்திருந்தார்.

தற்போது மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும் விருந்து கொடுத்துள்ளார். இதனிடையே தேநீர் விருந்தின் போது நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவருடன் மட்டும் அமித்ஷா தனியாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியது. தமிழக பாஜகவின் அடுத்தக் கட்ட நகர்வு குறித்து அமித்ஷா இருவரிடமும் பேசி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.