5 ஆக பிரியும் பெங்களூர் மாநகராட்சி… கர்நாடகா சட்டசபையில் அறிமுகம்.!!

பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிக்க வசதியாக ‘கிரேட்டர் பெங்களூர் கவர்னன்ஸ் (திருத்தம்) மசோதா 2025’ என்பது கர்நாடகா சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சட்டசபையில் இந்த மசோதா ஏற்கனவே நிறைவேறிய நிலையில் இன்று கர்நாடகா மேல்சபையில் நிறைவேறியது. இதன்மூலம் பெங்களூர் மாநகராட்சி 5 ஆக பிரிக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில் அதன் பெயர் உள்பட பிற முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ளனர். பெங்களூர் நகரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள், 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. பெங்களூர் மாநகராட்சியில் மொத்தம் 243 வார்டுகள் இருந்தன. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். இதில் டிகே சிவக்குமார் வசம் தான் பெங்களூர் நகர மேம்பாட்டு துறை உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூரை 5 மாநகராட்சியாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சியாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரித்தால் பிற மொழியினரின் கைகளுக்கு மேயர் பதவி செல்லும் என்று பாஜக எதிர்க்கட்சி தலைவர் ஆர் அசோக் கூறினார். இருப்பினும் பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிப்பதில் டிகே சிவக்குமார் உறுதியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தான் பெங்களூர் மாநகராட்சியை பிரிக்கும் வகையிலான மசோதா கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக பெருநகர பெங்களூரு (கிரேட்டர் பெங்களூரு) ஆணைய திருத்த மசோதாவை பெங்களூரு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் தாக்கல் செய்தார்.