அ.தி.மு.க யார் கையில் இருக்கிறது என்றுகூட தெரியாமல் சிலர் அறியாமையால் பேசுகிறார்கள். சிலர் கட்சி ஆரம்பித்த உடனேயே இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள், நாங்கள் அப்படியல்ல’ என்று த.வெ.க தலைவர் விஜய்க்கு, எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
மதுரை அருகே பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், பாசிச பா.ஜ.க-வுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது. மறைமுகக் கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அ.தி.மு.க தொண்டர்கள் வேதனையுடன் தவிக்கிறார்கள்.’ என்று விஜய் பேசினார். அ.தி.மு.க குறித்த விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலடிகொடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வியாழக்கிழமை பரப்புரையில் ஈடுபட்டார்.
முதலில், காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் பிரசார பயணம் நடந்தது. மாவட்ட செயலாளர் பி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அப்போது, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ‘பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் புனிதமான பூமி. அ.தி.மு.க என்பதே அண்ணாவின் பெயரையும், கொடியில் அண்ணாவின் உருவத்தையும் கொண்டது. இந்த புனித பூமியில் பேசுவதே என் பாக்கியம். யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அ.தி.மு.க யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம் அறியாமையில் பேசுகிறார்கள். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்?. இங்கிருக்கும் அவ்வளவு பேரும் அ.தி.மு.க தொண்டர்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசி வருகிறார்கள்.’ என்று விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் எடப்பாடி பழனிசாமி பதிலடிகொடுத்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘மரம் உடனே வளராது, செடி வைத்து தண்ணீர் ஊற்றி பின்னர் தான் பூப்பூத்து காய்காய்க்கும். அப்படித்தான் ஒரு இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கி 5 ஆண்டுகாலம் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார். பேறிஞர் அண்ணா எடுத்தவுடனே முதல்வர் ஆகவில்லை, நிறைய போராட்டங்களை சந்தித்தார், மொழிக்காக சிறை சென்றார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு தன்னையே அர்ப்பணித்தார். நம் தலைவர்கள் எல்லாம் அர்ப்பணித்து வாழ்ந்து அ.தி.மு.க-வை அடையாளம் காட்டிச் சென்றனர். அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள். நாங்கள் அப்படியல்ல. மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்து தான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள்.
அவர் யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம். சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள், அது நிலைக்காது. எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. எம்.ஜி.ஆர், அண்ணா, ஜெயலலிதா எல்லோரும் எடுத்ததுமே முதல்வர் ஆகவில்லை. மக்கள் நன்மதிப்பைப் பெற்றபின்னர்தான் முதல்வராக வர முடிந்தது.’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதைத் தொடர்ந்து, உத்திரமேரூரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘சில பேர் புதிதாக கட்சியைத் தொடங்கி இரண்டாவது மாநாடுதான் நடத்தியிருக்கிறார்கள், அது ஒன்றரை வயதுக் குழந்தை. இன்னும் ஒருமுறை கூட எம்.எல்.ஏ ஆகவில்லை, ஒரு முறை கூட தேர்தலை சந்திக்கவில்லை. ஆசைப்படுவது தவறல்ல. இது, ஜனநாயக நாடு, அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் உழைக்காமலே பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல்” என்று விஜய் பெயரைக் குறிப்பிடாமல் எடப்பாடி பழனிசாமி சாடினார்.
வாலாஜாபாத் பரப்புரையில் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘சில பேர் கட்சி தொடங்கி 2வது மாநாடு தான் நடத்தி இருக்கிறார்கள்; இரண்டு மாநாட்டிற்கே இப்படி என்றால், மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சி அ.தி.மு.க என்று நாம் நிரூபித்து உள்ளோம். புதிதாக கட்சி தொடங்கி ஆட்சி பிடிக்க ஆசை படலாம்; ஆனால் உழைக்காமல் வெற்றி பெற முடியாது’ என்று கூறினார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘தி.மு.க-வை வீழ்த்தும் ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே; அ.தி.மு.க யார் கையில் இருக்கிறது என சிலர் அறியாமையில் பேசுகிறார்கள்; தி.மு.க-வை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே’ என்று கூறியுள்ளார்.