அமெரிக்காவை இந்தியா எப்படி நம்பும்..? சர்வதேச அரசியல் ஊடகவியலாளர் வேதனை..!

சர்வதேச விவகாரங்களில் ஆழமான புரிதலுக்காக அறியப்படும் ஊடகவியலாளர் ஃரீட் சக்காரியா, சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை மாற்றம் குறித்து பேசிய அவர், இந்தியாவுக்கு வரிவிதித்தது அமெரிக்காவின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாக இருக்கலாம் என்றும், இதன் விளைவாக இந்தியா இனி அமெரிக்காவை நம்பாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஃரீட் சக்காரியாவின் கூற்றின்படி டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, உள்நாட்டு அரசியல் மற்றும் வர்த்தக நலன்களை மட்டுமே மையமாக கொண்ட கொள்கைகளை வகுத்து வருகிறது. இது, பாரம்பரியமாக அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருந்த நாடுகளுடன் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைப்பாடு, இந்தியாவுடனான உறவிலும் சந்தேகங்களை விதைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு கடந்த பல ஆண்டுகளாக வலுப்பெற்று வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், அமெரிக்காவின் திடீர் கொள்கை மாற்றங்கள், இந்தியாவை பாதிக்கும் வகையிலான வர்த்தக முடிவுகள், இந்தியாவின் நம்பிக்கையை குறைத்துள்ளதாக சக்காரியா கூறுகிறார்.

இந்தியா போன்ற ஒரு நாடு, தனது வெளிநாட்டு உறவுகளை நீண்ட கால நலன்களை கருத்தில் கொண்டே வகுக்கிறது. ஆனால், அமெரிக்காவின் நிலையற்ற கொள்கைகள், இந்தியாவின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை காப்பாற்றுமா என்ற சந்தேகம் இந்தியாவுக்குள் உருவாகியுள்ளது.

சக்காரியாவின் பார்வையில், அமெரிக்கா தனது நட்பு நாடுகளை மதிக்கும் தன்மையை குறைத்துக்கொண்டால், அந்த நாடுகள் மாற்று வழிகளை தேட தொடங்கும். இது, இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தியா, தனது நலன்களை பாதுகாக்க, வேறு சில வல்லரசு நாடுகளுடனோ அல்லது பிராந்திய கூட்டணிகளுடனோ நெருக்கமாக செயல்பட தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

மொத்ததில் அமெரிக்காவின் தவறான செயல்களால் ஏற்பட்ட பாதிப்பு உடனடியாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்தியா இனி அமெரிக்காவை நம்பாது என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிடும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்” என்று தனது கருத்தை நிறைவு சக்காரியா செய்கிறார்.