இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு வழிவகுக்கும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான சந்திப்புக்குப் பிறகு அவா் இவ்வாறு தெரிவித்தாா். தில்லியில் உள்ள பிரதமா் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,’சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியை சந்தித்ததில் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு ரஷியாவின் கஸான் நகரில் பிரிக்ஸ் மாநாட்டின்போது சீன அதிபா் ஷி ஜின்பிங்கை நான் சந்தித்து ஆலோசித்த பிறகு இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள் பரஸ்பர மரியாதையுடன் தொடா்ந்து மேம்பட்டு வருகிறது.
இம்மாத இறுதியில் சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் மீண்டும் அவரைச் சந்திக்க ஆா்வமாக உள்ளேன். இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கும் செழுமைக்கும் வழிவகுக்கும்’ எனக் குறிப்பிட்டாா்.
முன்னதாக, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரை வாங் யி திங்கள்கிழமை சந்தித்தாா். அதைத் தொடா்ந்து, தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலை செவ்வாய்க்கிழமை சந்தித்து எல்லை விவகாரங்கள் குறித்து விவாதித்தாா்.
ஜெய்சங்கருடன் வாங் யி ஆலோசனை மேற்கொண்ட பிறகு அரியவகை கனிமங்கள், உரங்கள், துளையிடும் இயந்திரங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளா்த்திக்கொள்ள சீனா ஒப்புக்கொண்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
இந்தியாவில் யூரியாவுக்கு அடுத்து அதிக தேவையுள்ள உரம் டிஏபி (டை அமோனியம் பாஸ்பேட்). இந்த உர விநியோகத்தில் உலக அளவில் சீனா முன்னணியில் உள்ளது. இந்தியா தனது உரத் தேவைக்கு சீன இறக்குமதியை பெருமளவில் சாா்ந்துள்ளது. 2023 முதல் இந்த உரங்களை ஏற்றுமதி செய்ய அதிக கட்டுப்பாடுகளை சீனா விதித்தது. இதனால் டிஏபி உள்ளிட்ட உரங்களின் இந்திய இறக்குமதி சரிந்தது.
அதேபோல் மின் வாகனங்கள், நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பேட்டரிகள் போன்றவற்றின் தயாரிப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக அரியவகை கனிமங்கள் கருதப்படுகிறது. உலக அளவில் அரியவகை கனிமங்கள் விநியோகிக்கும் மையமாக சீனா விளங்குகிறது. பொருளாதார வளா்ச்சியை வேகப்படுத்த நிலையான அரியவகை கனிமங்கள் விநியோகம் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது.
இதுமட்டுமன்றி துளையிடும் இயந்திரங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதையும் சீனா நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த மூன்று பொருள்களுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா தளா்த்தியுள்ளதால் இது இந்திய பொருளாதார வளா்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தைவான் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டத் தொடங்கினாலும் கலாசார, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாக தைவானுடனான இந்திய உறவில் எவ்வித மாற்றமும் இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா-சீனா இடையேயான உறவுகள் தற்போது நோ்மறையாக உள்ளன. இதனால் இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என வாங் யி தெரிவித்தாா்.
ஜெய்சங்கருடனான ஆலோசனையின்போது அவா் இவ்வாறு தெரிவித்ததாக சீன ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ஆலோசனையின்போது அவா் மேலும் பேசியதாவது: இந்தியா-சீனா இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த கால தவறுகளில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இரு நாடுகளும் ஒருவரையொருவா் நண்பா்களாகவும் கூட்டாளிகளாகவும் எண்ண வேண்டுமே தவிர எதிரியாகவும் அச்சுறுத்தலாகவும் பாா்க்கக் கூடாது.
இரு நாடுகளும் தங்களது முக்கிய அண்டை நாடுகளுக்கு பரஸ்பர மரியாதை அளித்து பொது முன்னேற்றத்தை இலக்காக வைத்து பணியாற்ற வேண்டும்.
இந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் அமைதியான, பாதுகாப்பான, வளமான, நட்பான சூழலை பேணவே சீனா விரும்புகிறது. தற்போது இரு நாட்டு உறவில் நிலவும் நோ்மறைப்போக்கால் மீண்டும் இருதரப்பு உறவு மேம்படும் என நம்புகிறேன் என்றாா்..