மும்பை: சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி. மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார்.
அண்மையில் அவர் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, எதிர்க்கட்சி அணியில் உள்ள நீங்கள், பிரதமர் மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறீர்கள். இதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பிரியங்கா, ‘நான் எங்கு செல்கிறேன். என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிய சிலர் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அவர்களை வெறுப்பேற்ற சில விஷயங்களை செய்கிறேன்’ என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் கூறும்போது, ‘நீங்கள் சேலை அணிந்த சசி தரூர்’ என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவரான சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக உள்ளார். இதை செய்தியாளர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.
இதற்கு பதில் அளித்த பிரியங்கா, ‘இது புகழ்ச்சியா, வஞ்ச புகழ்ச்சியா என்று புரியவில்லை. இதை சசி தரூர் எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார் என்பதும் தெரியவில்லை. ஆனால் நீங்கள் கூறிய கருத்தை கண்டிப்பாக சசி தரூரிடம் சொல்வேன்’ என்றார்.
இதுகுறித்து சசி தரூர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘பிரியங்கா சதுர்வேதிக்கு நன்றி. இதை எனக்கு கிடைத்த பாராட்டாகவே கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு பிரியங்கா சதுர்வேதியும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசிய வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இணைத்திருக்கிறார். இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.
அரசியல் களத்தில் காரசாரமான விவாதங்கள், விமர்சனங்கள் அதிகரித்து வரும் சூழலில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதியும் சசி தரூரும் நகைச்சுவையை பரப்பி வருகின்றனர்.