தண்டவாளங்களில் சோலார் பேனல்கள் – இந்திய ரயில்வேயின் அசத்தல் திட்டம்.!!

நாடு முழுவதும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் இரயில் பயண சேவையை அளித்து வருகிறது இந்தியன் இரயில்வே.

பயணிகளின் வசதிக்காக பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வரும் இரயில்வே துறை, தற்போது மின்சாரத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களையும் மின்சார உற்பத்தி நிலையங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளது இரயில்வே துறை.

இதற்காக மிக எளிதில் அகற்றும் விதமாக சோலார் பேனல்களை தண்டவாளங்களில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது. இதன்படி முதற்கட்ட பரிசோதனை முயற்சி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் பகுதியில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பனாரஸ் இரயில் நிலைய தண்டவாளங்களில் 70 மீட்டர் நீளத்திற்கு 28 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டன. இதன்மூலம் மணிக்கு 15KW மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 20,000 வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்க முடியும் என்ற தகவலையும் இந்தியன் இரயில்வே தெரிவித்துள்ளது.

மின்சாரத் தயாரிப்பில் நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. சோலார் பேனல்களை அமைத்ததன் மூலம் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்பது கூடுதல் அம்சமாகும். அதோடு எளிதாக சேனல்களை அகற்ற முடியும் என்பதால், மின்சாரம் தாயாரிப்பில் இத்திட்டம் முதற்கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

இரயில் செல்லும் போது அதிர்வுகளால் சோலார் பேனல்கள் பாதிக்கப்படாமல் இருக்க, இரப்பர் பேட்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதோடு தண்டவாளப் பராமரிப்பின் போது பேனல்களை எளிதாக நீக்க முடியும். இந்தத் திட்டம் சுவிட்சர்லாந்து நாட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரயில்வே பொது மேலாளரான நரேஷ் பால்சிங் இதுகுறித்து கூறுகையில், “செயலில் உள்ள இரயில் பாதைகளுக்கு இடையில் தான் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இரயிலுக்கோ அல்லது போக்குவரத்திற்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. இவை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட சோலார் பேனல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சூரிய ஆற்றலை நம்மால் உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதோடு சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் இத்திட்டம் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும். பசுமை ஆற்றல் உற்பத்தியை இரயில்வே துறை தொடங்கியதன் மூலம், இனிவரும் காலங்களில் மின்சாரப் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு கிடைத்து விடும். அதோடு மின்சார உற்பத்தியில் இந்தியன் இரயில்வே வலுவான சக்தியாக உருவெடுக்கும்” என அவர் தெரிவித்தார்.

இந்தியன் இரயில்வேயில் சுமார் 1.2 இலட்சம் கி.மீ. பரப்பளவில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரயில் நிலையங்களை மின்சார உற்பத்தி நிலையங்களாக மாற்றும் முயற்சி விரிவாக்கம் செய்யப்படும் பட்சத்தில், மின்சார உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கும். இத்திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டால், வருடந்தோறும் ஒரு கிலோமீட்டர் சோலார் பேனல்களின் மூலம் 32,100 kwh மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.