போங்க தம்பி எப்ப பாரு காமெடி பண்ணிட்டு… திடீரென ஆளுநர் ஆகிறாரா எச்.ராஜா..?

சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மரணம் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் இரு மாநிலங்களுக்கும் ஆளுநரை நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தை குறி வைத்திருக்கும் பாஜக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை ஆளுநராக நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த உடன் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜகவின் பார்வை தமிழகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. பல மாநிலங்களில் ஆளும்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது.

அதிமுக, திமுக என ஏதாவது ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தான் 4, 5 எம்எல்ஏ சீட்டுகளை பெற முடியும் என்ற நிலையில் இருக்கிறது. தெலுங்கானா, கர்நாடகாவில் வலுவாக இருந்தாலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் பல ஆண்டுகளாகவே பாஜகவுக்கு இருக்கிறது.

இதை அடுத்து அடிக்கடி தமிழகத்தில் தலைவர்களை மாற்றி கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது பாஜக தலைமை. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேசிய அளவில் பதவிகளை கொடுத்து பாஜக, தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்க விரும்புகிறது பாஜக தலைமை. ஏற்கனவே எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் தமிழக பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் சி பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் 2026 தேர்தலை ஒட்டி தமிழக பாஜக தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறது பாஜக தலைமை. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழக பாஜக தலைவர்களின் மூத்தவருமான இல.கணேசன் மறைவடைந்தார்.