பாகிஸ்தானில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, பாகிஸ்தானின் பொருளாதார நிலை கீழே இறங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவுடனான பஹல்காம் தாக்குதலில் சேதத்தையும் சந்தித்தது பாகிஸ்தான்.
இந்நிலையில் இயற்கையும் கோர தாண்டவமாடி வருகிறது.
பாகிஸ்தானில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 650ஆக உயர்ந்துள்ளதாகவும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905 ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல மாவட்டங்களில் மேக வெடிப்பால் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 307 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. இதில் 905 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுவரையில் 3,500 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெருவெள்ளத்தில் காணாமல் போனவா்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்த 2,000 வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.