திரைப்பட நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி வந்த ரஜினி அதிலிருந்து விலகிய நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்து விட்டார் விஜய்.
இத்தனைக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் இருக்கிறார். ஆனாலும் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போவதாக முடிவெடுத்திருக்கிறார். இது அவரின் ரசிகர்களில் பலருக்கு அதிர்ச்சி என்றாலும் அவரை முதலமைச்சராக பார்க்கும் ஆர்வம் பலருக்கும் இருக்கிறது.
கட்சி துவங்கிய உடனே விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர். அதேநேரம் அந்த மாநாடு நடந்தது தொடர்பாக அப்போது பல புகார்களும் செல்லப்பட்டது. போக்குவரத்து நெரிசல், சரியான குடிநீர் ஏற்பாடு செய்யாதது என சில பிரச்சினைகள் வந்தது.
இந்நிலையில்தான் வருகிற 21ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த மாநாடு 25ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் விநாயகர் சதுர்த்தி என்பதால் தேதியை மாற்றுமாறு காவல்துறை கூற மூன்று நாட்களுக்கு முன்பே அதாவது 21ஆம் தேதி மாநாடு நடைபெறவிருக்கிறது. எனவே அது தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏனெனில் ஒரு பக்கம் விஜயின் மாநாட்டை தடுப்பதற்காக காவல்துறை மூலம் ஆளும் கட்சி பல முயற்சிகளும் செய்து வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ‘முடிஞ்சா தடுத்து பாரு’ என பேசி இருக்கிறார். நடிகர் செந்தில் அதிமுகவுக்கு ஆதரவானவர். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்து இருக்கிறார். இப்போது அவர் விஜய்க்கு ஆதரவாகவும் திமுகவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.