வால்பாறை வேவர்லி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி அசாம் மாநில 7 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறிய நிலையில் தற்போது கரடி தாக்கி உயிரிழந்துள்ளது வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் குடியிருந்து தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் நூர்ஜிகான் என்பவர் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் அருகே உள்ள வீட்டில் பால் வாங்குவதற்காக சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சிறுவனை பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களும் இணைந்து தேடிச் சென்றுள்ளனர். சுமார் 7.30 மணியளவில் அருகே உள்ள புதருக்குள் வனவிலங்கு தாக்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சிறுவன் கிடந்துள்ளார். இதைக் கண்ட பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தை தாக்கியதாக உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் வனத்துறையின் தீவிர கண்காணிப்பால் சிறுவனை தாக்கியது சிறுத்தையல்ல கரடி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது . எனவே சிறுவனை தாக்கிய கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..