பண தகராறில் தொழிலாளி கொலை . நண்பர் கைது.

கோவை மே 27 கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெரியமத்தம் பாளையம் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று காலை அந்த கட்டிடத்துக்குள் ஒருவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு தலை, முகம் உள்ளிட்ட இடத்தில் பலத்த காயத்துடன்வாலிபர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் அருகே ஒரு செல்போன் கிடந்தது. அந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் துப்பு துலக்கினார்கள். இதில் அந்த செல்போன் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த ராஜாவை ( வயது 23) என்பவருக்குசொந்தமானது என்பது கண்டறியப்பட்டது. எனவே இறந்தவர் ராஜாவாக இருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேகித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் இறந்தவர் அவர் இல்லை என்பதும் ராஜாவின் செல்போனை இறந்தவர் வைத்திருந்ததும் தெரிய வந்தது .இதை தொடர்ந்து செல்போனுக்கு உரிய ராஜாவை பிடித்து போலீசார் விசாரணை தொடங்கினர். இதில் இறந்தவர் மதுரை , வண்டியூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ ( வயது 24)என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோவையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் ராஜா தனது செல்போனை நண்பரான இளங்கோவிடம் ரு 2ஆயிரத்துக்கு அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.. சம்பவத்தன்று இந்த விவகாரத்தில் இவர்கள் இருவருக்கும் இடையேஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜா இளங்கோவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது .இதை தொடர்ந்து அவரை போலீசார் இன்று காலையில் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.