சத்தியமங்கலம், மே.26:
தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் 69 அடியாக சரிந்தது. இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, கோவை மாவட்டம் பில்லூர் அணை மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து 4401 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 13667 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 71.62 அடியாகவும், நீர் இருப்பு 11.6 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும், என மொத்தம் 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
படம் புட்நோட்
பவானிசாகர் அணை நீர்மட்டம் 71.62 அடியாக உள்ளது.