அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது.!!

சென்னை: அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், இது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் அடர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும், தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பெரிதாக வெயில் இல்லை. பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்வித்தது. தொடர்ந்து தென்மேற்கு பருவமழை சீசன் வரும் 25 ஆம் தேதி வாக்கில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

“அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வடக்கு கர்நாடகா, கோவா கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் அடர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். கேரளாவில் ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் அடுத்த 10 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோவை முதல் வால்பாறை வரையிலும், நீலகிரி முதல் கூடலூர் வரையிலும், குமரி பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் ஒரு சில இடங்களில் 20 செமீ மழைக்கு கூட வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

வழக்கத்தை விடை இந்த முறை தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில் ஏற்றார்போலவே, ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கே வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது. அதே சமயத்தில் வெயிலும் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தில் தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. குமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.