மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. இவர் அடுத்த மாதம் 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பாகப் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி ரமணா தனது மனதில் இருக்கும் வேதனையைக் கொட்டித்தீர்த்தார்.
அவர் தனது உரையில், ”என்னை எனது சொந்த மாநிலமான ஆந்திராவிலிருந்து காரணமே இல்லாமல் இடமாற்றம் செய்தனர்.
அவர்களின் ஈகோவைத் திருப்திப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சிதான். இப்போது அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.
ஆனால் கடவுள் அவர்களை மறக்கவோ அல்லது மன்னிக்கவோ மாட்டார். வேறு வழியில் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
என்னைத் துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக என்னை இடமாற்றம் செய்தனர். காரணமே இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்றினார்கள்.
கொரோனாவிற்குப் பிறகு எனது மனைவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக எனக்குக் கர்நாடகாவிற்கு இடமாறுதல் கொடுக்கும்படி கேட்டேன்.
எங்கு இடமாறுதல் வேண்டும் என்று அவர்களும் என்னிடம் கேட்டார்கள். நான் கர்நாடகா வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை மத்தியப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவிடம் எனது மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி என்னைக் கர்நாடகாவிற்கு இடமாற்றம் செய்யும்படி கேட்டேன். அவர்கள் எனது கோரிக்கையைப் பரிசீலிக்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.
இப்போது தலைமை நீதிபதியாக இருக்கும் கவாய் எனது கோரிக்கையைப் பரிசீலிக்கலாம். ஆனால் காலம் கடந்துவிட்டது.
நான் ஓய்வு பெறப்போகிறேன். இடமாறுதலால் மன அழுத்தம் இருந்தாலும் மத்தியப் பிரதேசத்தில் எனக்கு சக நீதிபதிகள் மற்றும் பார்கவுன்சில் முழு ஆதரவு கொடுத்தனர்” என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.