கோவைமாநகராட்சி அலுவலகம் சி.பி.எம். முற்றுகை. போலீசாருடன்  மோதல்.பெண்கள் உட்பட 83 பேர் கைது.

கோவை மே 22 கோவை மாநகராட்சி கூட்டத்தில் கட்டடத்தின் பரப்பளவுக்கு ஏற்றபடி குடி நீர் கட்டணம் மாற்றியமைப்பது மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கான வைப்புத் தொகையை உயர்த்துவது என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் குடிநீர் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மேற்கண்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் என்று அறிவித்தனர். இந்த  போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக முன்  திரண்டனர் இதை யடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போலீஸ் பாதுகாப்பு வளையத்தையும் மீறி மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து மாநகராட்சி நுழைவாயில் மூடப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சிக்குள் நுழைய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் போலீசாரை தள்ளிவிட்டு மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதில் போலீஸ்காரர் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. வேறு ஒரு சில போலீசாரின் சீருடையில் இருந்த பெயர் அட்டைகள் அறுந்து விழுந்தன. இதைப்போல சில கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைசேர்ந்த 8 பெண்கள் உட்பட83பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.