சென்னை: தமிழ்நாடு அரசுக்குக் கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு நியாயமாகத் தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை மத்திய அரசு தரவில்லை என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி தரப்படும் என்று மத்திய அரசு சொல்வது ஏற்புடையது இல்லை என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. பி.எம்.ஸ்ரீ மற்றும் சமக்ர சிக்ஷா அபியான் திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் மத்திய அரசு இதுவரை அந்த நிதியை விடுவிக்கவில்லை. பி.எம்.ஸ்ரீ திட்டம் புதிய கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்பதே பதிலாக இருந்தது. தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இப்போது சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது.
ரூ.2291 கோடி கல்வி நிதியை விடுவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் பி.எம்.ஸ்ரீ மற்றும் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இப்போது வரை தமிழ்நாடு அரசுக்குத் தரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய கல்வி கொள்ளையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி இல்லாததால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.2291 கோடி கல்வி நிதியை வழங்க மத்திய அரசு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.