பள்ளிப் பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் : 4 குழந்தைகள் பலியான சோகம் – 38 பேர் காயம்..

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை பள்ளிப்பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.

மேலும், 38 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் அந்தப் பள்ளிக்கூட பேருந்தைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு எந்தவொரு அமைப்பும் இதுவரையில் பெறுப்பேற்கவில்லை. படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலானது தற்கொலைப் படை மூலமாக நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உள் துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், அப்பாவி குழந்தைகளைக் குறிவைக்கும் மிருகங்களுக்கு எந்தவொரு கருணையும் காட்டப்படக் கூடாது, எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனிநாடாக உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி பலூச் போராளிகள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நீண்டகாலமாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.