கோவை 21கோவை
மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் கோடை வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குட்டியுடன் ஒரு பெண் யானை வனத்தை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்தது. இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த யானை குட்டியுடன் நீண்ட நேரம் அசையாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் வந்து கண்காணித்தனர். அப்போது அந்த யானை நிற்க முடியாமல் திடீரென்றுகீழே விழுந்தது. தாய் யானை கீழே விழுந்ததும் அதன் அருகில் நின்று கொண்டிருந்த குட்டி யானை தனது துதிக்கையால் பாசத்துடன் தாயை எழுப்ப முயன்றது. இந்த பாச காட்சிகள் பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது. .இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து துரியன் என்ற கும்கி யானை கொண்டுவரப்பட்டது. அந்த யானை உதவியுடன் ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் படுத்து கிடந்த யானையை நிற்க வைத்து சிகிச்சை அளிப்பதற்காக கும்கி யானை துரியன் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் வந்ததால் சிகிச்சை அளிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதற்காக சுயம்பு என்ற மற்றொரு கும்கி யானை வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி இருந்தனர் .இந்த கும்கி யானைகள் இருந்ததால் தாய் யானையை விட்டு குட்டியானை காட்டுக்குள் சென்று விட்டது. இருந்தாலும் பாசத்துடன் தொலைவில் நின்று பிளிறி கொண்டிருந்தது. 5மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் நேற்று காலை முதல் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் .மேலும் ஊட்டச்சத்து மருந்துகள் உணவுகள் கொடுத்து வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று மாலையில் சிகிச்சை பலனளிக்காமல்அந்த யானை பரிதாபமாக இறந்தது.இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. அதற்கு பின்னல் தான் யானை இறப்பின் காரணம் தெரிய வரும் .யானை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.