தீவிரவாதிகளுக்குத் தென்மாநிலங்களே ஈஸியான இலக்கு- பவன் கல்யாண் பகீர் தகவல்.!!

மராவதி: நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராணுவத்தை விட மாநில போலீசார் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹைதராபாத் மற்றும் கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், தீவிரவாதிகளுக்குத் தென்மாநிலங்களே ஈஸியான இலக்குகளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. அதேநேரம் மறுபுறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டிருந்த இரு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், ராணுவத்தை விட மாநில போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் ஹைதராபாத் மற்றும் கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், தென் மாநிலங்களிலே தீவிரவாதிகளுக்கு டார்கெட்டாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “தென் மாநிலங்கள் பயங்கரவாதிகளுக்கு ஈஸியான இலக்குகளாக உள்ளன. இதனால் எல்லையில் உள்ள பாதுகாப்புப் படையினரை விட மாநில போலீசார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கடற்கரையில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். மாநில காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருக்கிறேன்.ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து நிலவும் சூழலால் தொடர் விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு தேவை.

மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் இருக்கலாம் என்பதால் மிகவும் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்யுமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன். புலம்பெயர்ந்தோரை முறையாகக் கண்காணிப்பது ஆபத்துகளைத் தடுக்க உதவும். கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

கடந்த காலங்களில், காக்கிநாடாவில் படகு மூலம் ஆட்கள் வருவதாகச் செய்திகள் வெளியானது. அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கை இருப்பது போலீசார் ஆபரேஷனில் தெரிய வந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் குறித்துப் பேசிய அவர், “2017-18 ஆம் ஆண்டில் ஏராளமான ரோஹிங்கியாக்கள் தங்க நகைகளைச் செய்ய ஆந்திரப் பிரதேசத்திற்கு வந்தனர். மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியாக்கள் வருகையால் உள்ளூர் இளைஞர்கள் வேலையின்மை பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரோஹிங்கியாக்கள் கடந்த காலங்களில் ரேஷன் கார்டுகள், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று நிரந்தரமாகக் குடியேறினர். இதன் மூலம் அவர்கள் நிரந்தரமாகத் தங்க முடிகிறது அவர்களைக் கண்காணிப்பதில் அலட்சியம் தெளிவாகத் தெரிகிறது. அவர்களால் எப்படி சட்டவிரோதமாக ஆதார உள்ளிட்ட ஆவணங்களைப் பெற முடிகிறது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது தான் உண்மை தெரிய வரும்” என்றார்.