மாதம் தோறும் மின் கணக்கீடு திட்டம் விரைவில் வருகிறது – எஸ்.எஸ்.சிவசங்கர்.!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது.

இதில், சிந்து பூந்துறை பகுதியில் மாநகராட்சி எரிவாயு தகனமேடை அருகே மரம் முறிந்து மின்தடை ஏற்பட்டது. இதில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாதததால், தகனம் செய்ய கொண்டு வரப்பட்ட 7 உடல்களுடன், உறவினர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்த அவல நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், சிந்து பூந்துறை எரிவாயு தகனமேடை அருகில் மின்சார வாரியத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை, மின்வாரிய அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இன்று (மே 16) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர்,கோடை மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சரி செய்யப்பட்டு வருவதாக கூறினார். அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் வழங்கப்பட்டுவிடும் என்று கூறினார்

“நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் தச்சநல்லூர் பகுதியில் மிந்தடை ஏற்பட்டது. இதில், உடல்கள் தகனம் செய்யப்படாமல் இருந்த தகவல் அறிந்து, முதலமைச்சர் உத்தரவுப்படி தற்போது சம்மந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மழையால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து மின் தடை ஏற்பட்டது. மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என மின்தடை செய்யப்பட்டது. இந்த நேரத்தில், மின்தகனத்திற்கு வந்த 7 உடல்கள் தகனம் செய்ய தடை ஏற்பட்டது. உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு 7 உடல்களும் தகனம் செய்யப்பட்டது.

திருநெல்வேலியில் பெய்த கோடைமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் செய்யப்பட்டுவிடும். தச்சநல்லூர் தகனமேடையில் ஜெனரேட்டர் பழுது பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பயனர்களுடைய அஜாக்கிரதை காரணமாகவும் விபத்துகள் நேரிடுகின்றன.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை. தற்போது மழையும் பெய்துவருவதால் மின் பற்றாக்குறை பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. மேலும் காற்றாலை மின்சாரமும் விரைவில் கிடைக்கும் என்பதால் பிரச்சினைகள் எழாது. தேவைப்பட்டால் வெளியில் இருந்து மின்சாரம் வாங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பல இடங்களில் மின்வாரிய அதிகாரிகளின் கவனத்துக்கு வராமல் மின்விபத்து சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம்.

மின் வாரியத்தில் போதுமான பணியாளர்களை நியமிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மின்தடை போன்ற மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே மின்னகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி பிரச்சினைகள் இருந்தாலும் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். காலம் கனியும்போது மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.