சூலூர் விமானப்படை தளத்திற்குள் அத்துமீறி புகுந்த வட மாநில வாலிபர் சிக்கினார்.

கோவை 16 கோவை மாவட்டம் சூலூரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கு ” தேஜாஸ் ” போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விமானப்படை தளத்தை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 24 மணி நேரமும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமானப்படை தளத்தின் சுற்றுச்சுவரை தாண்டி நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் உள்ளே புகுந்தார். இதை கவனித்த வீரர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். விமானப்படை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது பெயர் சந்தீப் என்றும் சண்டிகரை சேர்ந்தவர் என்றும் கூறியதுடன் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் அந்த வாலிபரை விமானப்படை அதிகாரிகள் சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவருக்கு மனநல பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பது தெரிய வந்தது. எனவே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.