பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று(மே 16) மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் சில மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்துக்கு இதுவரை வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் கூட்டணி முடிவு, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டச் செயலாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள் என அனைவரும் கூட்டத்தில் பங்கேற்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் மோதல் நிலவி வந்த நிலையில் பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டின் இருவரும் பங்கேற்று இருந்த நிலையில், இக்கூட்டத்துக்கு அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்காதது அக்கட்சியினர் இடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.