அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே 142 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்திட்டு உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்துள்ளனர்.
இந்த டீல் மூலம் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சவுதி அரேபியா அதி நவீன உபகரணங்கள் மற்றும் சர்வீஸ் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியா நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். உலகின் முக்கிய பவர் சென்டர்களாக உள்ள இந்த இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரின் ராயல் பேலஸில் வைத்து, டொனால்ட் டிரம்ப் மற்றும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்தனர்.
முன்னதாக டிரம்புக்கு சவுதியில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. சுமார் த்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கின் அடிப்படையில் டிரம்ப் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் சவுதி அரேபியா தரப்பில் அமெரிக்காவில் முதலீடு செய்வது தொடர்பான உரையாடல்கள் நடைபெற்றுள்ளன. எரிசக்தி, பாதுகாப்பு, கனிமவளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.
மேலும், பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யவும் சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புத் துறையில் மட்டுமே 142 பில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே போடப்படும் மிகப்பெரிய ஒப்பந்தமும் இதுதான். “இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிடம் இருந்து சவுதி அரேபியா அதிநவீன போர் கப்பல்கள் மற்றும் உபகரணங்களை பெறும். எரிசக்தியில் 5 பில்லியன் டாலர் முதலீடு, ஏரோ ஸ்பேஸில் 5 பில்லியன் டாலர், விளையாட்டுத்துறையில் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.” என்று வெள்ளை மாளிகை வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது. இந்தப் பயணத்தில் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் செல்லவுள்ளார். அவருடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களும் இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் நாளை கத்தார் செல்லவுள்ளார்.