பொய், பித்தலாட்டம் செய்வதே எடப்பாடியின் வேலை – ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் சாடல் ..!

முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் , அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்‌.

முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கு நேற்று மாலை கரும்பு வழங்கிய முதலமைச்சர்,

பழங்குடி பாகன்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்துள்ளார்.இந்த நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மைதானத்தில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” அ.தி.மு.க – வின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவமே சாட்சி என தொடர்ந்து சொல்லி வந்தோம். அ.தி.மு.க ஆட்சியில் இருந்த சமயமான கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட யாருமே தப்ப முடியாது எனச் சொல்லியிருந்தோம். எத்தகைய பின்புலம் இருந்தாலும் தி.மு.க ஆட்சியில் தண்டனை நிச்சயம் என திட்டவட்டமாகச் சொல்லியிருந்தோம். இன்றைக்கு அது நடந்திருக்கிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி நிலை நாட்டப்படும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை எதற்காக சந்தித்தார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். மெட்ரோ திட்டம் முதல் நூறுநாள் வேலைத் திட்டம் வரை நிதியை நான்தான் கேட்டேன் என பொய் சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பொய், பித்தலாட்டம் செய்வதே வேலையாகக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும் ” என்றார்.