ஜம்மு காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ஜம்மு மற்றும் எல்லையோர மாவட்டங்களில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு உறுதியான பதிலடியை கொடுத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வந்தது.
பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் எனும் நடவடிக்கை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகளைக் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தின் இந்த வெற்றி பாகிஸ்தானை ஆத்திரமடையச் செய்த நிலையில், பாகிஸ்தான் எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. காஷ்மீர், பஞ்சாப் உட்பட எல்லையோர மாவட்டங்களில் பாகிஸ்தான் டிரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதுவரை எந்தவொரு சேதாரமும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக எல்லையில் பல்வேறு இடங்களில் 24 மணி நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் தொடர்ந்து சைரன்கள் ஒலித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நடுவானிலேயே அந்த டிரோன்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு உறுதியான பதிலடி கொடுத்து வருவதாக என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: இத்தாலியின் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான அன்டோனியா தஜானியுடன் பேசப்பட்டுள்ளது. அப்போது, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியாவின் இலக்கு மற்றும் பதிலடி குறித்து விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு உறுதியான பதிலடி கொடுத்து வரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.